தூத்துக்குடி நகைக்கடை சுவரில் சூலாயுதத்தால் துளையிட்டு 5 கிலோ வெள்ளி கொள்ளை: 4 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி சாந்திநகரைச் சேர்ந்தவர் முருகன் (60). இவர் சிதம்பரநகரில் நகைக்கடையுடன் இணைந்த நகை பட்டறை நடத்தி வருகிறார். முருகன் நேற்று முன்தினம் இரவு  வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று காலையில் கடையை திறந்த போது, பொருட்கள் சிதறிக் கிடந்தன. மர்மநபர்கள் கடை சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த சுமார் 5 கிலோ வெள்ளி பொருட்கள், இரண்டரை பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் எஸ்பி பாலாஜி சரவணன், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், எஸ்ஐ சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து கடையில் இருந்த  சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நேற்று அதிகாலையில் மர்ம நபர்கள் கடையின் உள்ளே புகுந்து வெள்ளி பொருட்களை அள்ளிச் சென்றது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

காமிரா பதிவின் அடிப்படையில் எஸ்ஐ சிவகுமார், ஏட்டுகள் மாணிக்கராஜ், திருமணிராஜன், முத்துப்பாண்டி, மகாலிங்கம், முத்துராஜ், செந்தில் ஆகியோர் அடங்கிய  தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதில் கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடி லோகியாநகரைச் சேர்ந்த முனியசாமி என்ற குட்டி (24), பிரையன்ட்நகரைச் சேர்ந்த சதீஷ் என்ற மோசஸ் (21), லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுடலையாண்டி (29) மற்றும் தூத்துக்குடி சாந்திநகரை சேர்ந்த 19 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்டனர்.

Related Stories: