தூத்துக்குடி நகைக்கடை சுவரில் சூலாயுதத்தால் துளையிட்டு 5 கிலோ வெள்ளி கொள்ளை: 4 பேர் அதிரடி கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி சாந்திநகரைச் சேர்ந்தவர் முருகன் (60). இவர் சிதம்பரநகரில் நகைக்கடையுடன் இணைந்த நகை பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறந்த போது, பொருட்கள் சிதறிக் கிடந்தன. மர்மநபர்கள் கடை சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து சுமார் 5 கிலோ வெள்ளி பொருட்கள், இரண்டரை பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.5  லட்சம். புகாரின்படி தென்பாகம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். கடையில் இருந்த  சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது  சுவரில் கோயில் சூலாயுதத்தால் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் முதலில் லாக்கரை திறக்க முயன்றுள்ளனர். அது முடியாததால் அதிலிருந்த 15 கிலோ வெள்ளி பொருட்கள் தப்பின. வெளியில் இருந்த பொருட்களை மட்டும் எடுத்து சென்றுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து  தனிப்படையினர் விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடி லோகியாநகரைச் சேர்ந்த முனியசாமி என்ற குட்டி (24), பிரையன்ட்நகரைச் சேர்ந்த சதீஷ் என்ற மோசஸ் (21), லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுடலையாண்டி (29) மற்றும் தூத்துக்குடி சாந்திநகரை சேர்ந்த 19 வயது சிறுவன் என ெதரியவந்தது. அவர்களை தனிப்படையினர் கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்டனர்.

Related Stories: