×

தமிழகத்தில் உள்ள சொத்துக்கள் உட்பட ஆம்வே நிறுவனத்தின் ரூ.757 கோடி முடக்கம்

புதுடெல்லி: ஆம்வே இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நாடு முழுவதும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் செய்து வந்தது. இந்த நிறுவனம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்நிலையில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், ஆம்வே நிறுவனத்துக்கு சொந்தமான ₹757 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கதுறை தற்போது முடக்கி உள்ளது. இதில், தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிறுவனத்துக்கு சொந்தமான நிலம், தொழிற்சாலை கட்டிடம், இயந்திரங்கள், வாகனங்கள், வங்கி கணக்குகள், வைப்பு நிதி உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன. ரூ.757 கோடியில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.411.83 கோடியாகும். மீதமுள்ளவை நிறுவனத்துக்கு சொந்தமான 36 வங்கி கணக்குகளில் வைக்கப்பட்டுள்ள தொகையாகும் என அமலாக்கத்துறை கூறி உள்ளது.

இது குறித்து ஆம்வே இந்தியா நிறுவனம் அளித்துள்ள விளக்க அறிக்கையில், `அமலாக்கத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை, 2011ம் ஆண்டு வரை பின்தேதியிட்ட விசாரணைக்கு தொடர்புடையதாகும். 2011ம் ஆண்டு முதல், அதிகாரிகள் கேட்ட அனைத்து தகவல்களும் பகிரப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து ஒத்துழைப்போம். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் (நேரடி விற்பனை) விதிகள் 2021ன் கீழ், நேரடி விற்பனையை சமீபத்தில் சேர்த்தது, தேவையான சட்டம் மற்றும் ஒழுங்குமுறை தெளிவை கொண்டு வந்துள்ளது. அதே நேரம், இந்தியாவின் அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு ஆம்வே இந்தியா நிறுவனம் தொடர்ந்து இணக்கமாக இருக்கும்.  இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், மேற்கொண்டு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை,’ என்று கூறப்பட்டுள்ளது.



Tags : Amway ,Tamil Nadu , Amway freezes Rs 757 crore, including assets in Tamil Nadu
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...