உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு பழங்கால கோயில்களின் புகைப்பட கண்காட்சி: செங்கை கலெக்டர் துவக்கி வைத்தார்

மாமல்லபுரம்: கடந்த 1982ம் ஆண்டு துனிசியாவில் நடந்த ஒரு மாநாட்டில் ஏப்ரல் 18ம் தேதி சர்வதேச நினைவிடங்கள் தினமாக கொண்டாட பரிந்துரைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இதனை 1983ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் அங்கீகரித்தது. அன்றைய தினத்தில், கட்டணமின்றி புராதன சின்னங்கள், அருங்காட்சியகங்களில் பொதுமக்களை அனுமதிப்பது. பாராம்பரியத்தை பறைசாற்றும் புத்தகங்கள், தபால் தலை, முத்திரைகள் ஆகியவற்றை அச்சிடுவது, வெளியிடுவது, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாராம்பரியத்தின் பெருமைகளை எடுத்து சொல்வது ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், மாமல்லபுரம் தொல்லியல் துறை சார்பில், கடற்கரை கோயில் வளாகம் முன்பு உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலெக்டர் ராகுல்நாத் கலந்து கொண்டு, முற்கால சோழர் கோயில்கள், இடைக்கால சோழர் கோயில்கள், கோயில் புனரமைப்பு பணிகளின் புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்த கண்காட்சி வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. தொடர்ந்து, கலெக்டர் ராகுல் நாத், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் இலவசமாக கடற்கரை கோயிலை சுற்றிப் பார்க்க தனியார் கார் கம்பெனி வழங்கிய 8 பேர் பயணிக்கும் 3 பேட்டரி வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதேப்போல், கடற்கரை கோயில் உட்புறம், வடக்கு, தெற்கு பக்கம் உள்ள கல்வெட்டில் உள்ள வசனத்தை விளக்கும் வகையில் பெயர் பலகையையும் திறந்து வைத்தார். மேலும், உலக பாராம்பரிய தினத்தையொட்டி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் கட்டுரை போட்டி நடந்தது.

நிகழ்ச்சியில், தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஷ்வரன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் இஸ்மாயில், மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன், துணை சுற்றுலா அலுவலர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: