×

வெளிநாடுகளுக்கு இணையாக நவீன சிகிச்சை வழங்கியதால் ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்லவில்லை: ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் வாக்குமூலம்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில், ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஓபிஎஸ், சசிகலா உள்பட சுமார் 150 க்கும் மேற்பட்டோர் இதுவரை ஆஜராகி வாக்குமூலங்களை அளித்துள்ளனர்.மேலும், இவர்களிடம் ஆணையம் தரப்பிலும் சசிகலா தரப்பிலும் விசாரணை முடிக்கப்பட்டு, அப்போலோ மருத்துவர்களிடம் மறுவிசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் 2ம் முறையாக ஆறுமுகசாமி ஆணையத்தில் 4 மருத்துவர்கள் ஆஜராகி இருந்தனர்.

அப்போலோ மருத்துவர்கள் சார்பில் விஜயசந்திர ரெட்டி, கிரிநாத், பாபு ஆபிரகாம் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர் நந்தகுமார் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். இவர்களிடம் அப்போலோ தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர்.இதில் நால்வரும் தங்களுடைய வாக்குமூலங்களை அளித்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து அப்போலோ வழக்கறிஞர்கள் மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பி வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

அப்போது நீதிபதி ஆறுமுகசாமி குறுக்கிட்டு ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் இருந்ததா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அப்போலோ மருத்துவர் கிரிநாத், வெளிநாடுகளுக்கு இணையான சிகிச்சை முறைகள் அப்போலோ மருத்துவமனையில் இருப்பதாகவும், திறமையான மருத்துவர்கள் இருப்பதாலும் அதற்கான அவசியம் எழவில்லை என வாக்குமூலம் அளித்தார். இந்த விசாரணை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இரு கட்டமாக நடைப்பெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் 3 பேர் மறு விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.

Tags : Jayalalithaa ,Apollo ,Arumugasami Commission , Jayalalithaa was not taken abroad as she was given modern treatment on par with foreigners: Apollo doctors confess to Arumugasami Commission
× RELATED வலது தொண்டை குருதிக்குழாயில்...