அரசு கொள்கை முடிவு எடுத்து பெத்தேல் நகர் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்: பேரவையில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் வருவாயத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் சோிழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் பேசியதாவது: சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் 2008ம் ஆண்டு சென்னை முதல் மாஸ்டர் பிளானில் குடியிருப்பு பகுதி என சிஎம்டிஏவில் குறிப்பிடப்பட்டது. 2வது மாஸ்டர் பிளானில் 2026 வரை அவ்வாறு குறிப்பிடப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா வழங்க 2008ம் ஆண்டு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தீர்மானித்தது. அதன்படி, 2016ம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த கெஜலட்சுமி கள ஆய்வு செய்து, அனுபவத்தில் வைத்திருக்கும் இடங்களை அளவீடு செய்து, வரைபடங்கள் உட்பிரிவு செய்யப்பட்டு, அரசின் வழிகாட்டுதலுடன், பட்டா வழங்கலாம் என்று பரிந்துரை வழங்கினார்.

இந்நிலையில், பெத்தேல் நகர் சதுப்பு நிலம் இல்லை என நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஒரு பகுதி மேய்க்கால், மற்றொரு பகுதி கழிவெளி என வகைப்படுத்தப்பட்டாலும், அது நீர்ப்பிடிப்பு பகுதியாக இல்லை. எனவே பெத்தேல் நகருக்கு பட்டா வழங்கிட அரசு கொள்கை முடிவு எடுத்து ஒரு சிறப்பு ஆணையை வெளியிட்டு நீதிமன்றத்தின் முன்வைத்து, அப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். நில உச்சவரம்பு சட்டத்தின்கீழ் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதை அறியாமல், மடிப்பாக்கத்தில் சர்வே எண் 190, 192, 174/2 எண்களில் வீடுகட்ட பலர் நிலம் வாங்கியுள்ளார்கள். இவர்கள் அந்த இடத்தை கிரையம் பெற்று, பட்டா பெற முடியாத நிலை உள்ளது. எனவே, உச்சவரம்பு சட்டத்திலிருந்து தடையில்லா சான்று வழங்க வேண்டும்.

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கல்லுக்குட்டை பகுதி பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான இடம் என தெரியவருகிறது. இங்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வருவதால், அவர்களுக்கு பட்டாக்கள் வழங்க வேண்டும். பள்ளிக்கரணை காமாட்சி நகர், கே.பி.கே.நகர், காயிதே மில்லத் நகர் மற்றும் சோழிங்கநல்லூர் கிராம நத்தம் சர்வே எண் 439 ஆகிய பகுதிகளிலும் அரசு இடத்தில் பொதுமக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகட்டி வசித்து வருகிறார்கள். அவர்களின் நலனை கருதியும் பட்டாக்களை வழங்க வேண்டும். மடிப்பாக்கம் மயிலை பாலாஜி நகரில் 24 ஆண்டுகளுக்கு மேலாக 202 வீடுகள் கட்டி வசிப்பவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்மூலம் வழங்க வேண்டிய கிரய பத்திரம் வழங்க வேண்டும். உள்ளகரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கையகப்படுத்தப்பட்ட மனைப்பிரிவுகள் பிரித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உள்ளகரம் சர்வே எண் 90 மற்றும் 91ல் 35 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் 13 குடும்பங்களுக்கு கிரய பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 300 குடும்பங்களுக்கு கிரய பத்திரங்கள் செலுத்தி தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளன. மேலும் 200 குடும்பங்களுக்கு வாரியத்திற்கு கிரயப்பத்திரம் பெறுவதற்கான தொகை செலுத்தியும் கிரய பத்திரங்கள் பெற தடையில்லா சான்றிதழ் பெறமுடியவில்லை. இசிஆரில் விஜிபி, எம்ஜிஎம்,  மாமல்லபுரம் போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளதால், இசிஆர் பகுதியை உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா மண்டலமாக உருவாக்க வேண்டும். சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்  பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை நீதிமன்றத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: