வடகடலோரத்தில் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: தமிழகத்தின் மேல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சியால் சேலம், நாமக்கல், பெரம்பலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழை நேற்று பெய்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது. அதிகபட்சமாக தியாகதுர்க்கத்தில் 70மிமீ மழை பெய்துள்ளது. இதற்கிடையே, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது.

வேலூர் 102 டிகிரி, மதுரை, திருச்சி, திருத்தணி 100 டிகிரி, சேலம் 99 டிகிரி, சென்னை 97 டிகிரி வெயில் நிலவியது. இதன் காரணமாக ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாகவும், வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 20ம் தேதி முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

Related Stories: