கடம்பூர் மலைப்பகுதியில் சாலையோரம் முகாமிட்ட காட்டு யானைகள்: பிளிறியதால் வாகன ஓட்டிகள் பீதி

சத்தியமங்கலம்; கடம்பூர் மலைப்பகுதியில் சாலையோரம் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் வாகனங்களைக் கண்டு பிளிறியதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர். ஈரோடு அடுத்த சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக காட்டு யானைகள் தீவனம் மற்றும் குடிநீர் தேடி பகல் நேரங்களில் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில்,  சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து குன்றி மலை கிராமத்திற்கு செல்லும் சாலையில் 7 காட்டு யானைகள் சாலையோரம் நின்றிருந்தன. தற்போது, சாலையில் செல்லும் வாகனத்தை கண்ட காட்டு யானைகள் கோபத்துடன்  தும்பிக்கையை ஆட்டியபடி பிளிறின.

காட்டு யானைகள் கோபத்துடன் பிளிரும் காட்சியை வாகனத்தில் சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். காட்டு யானைகள் பகல் நேரங்களில் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: