குமரி மாவட்டம் வழியாக செல்லும் ஓவர்லோடு வாகனங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தம்: அதிரடிப்படை போலீஸ் உதவியுடன் சோதனை

நாகர்கோவில்: குமரி மாவட்டம் வழியாக கனிமங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை சோதனை சாவடிகளில் தடுத்து நிறுத்தி அவற்றுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். குமரி மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் மற்றும் கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை தடுக்க எல்லையோர பகுதிகளில் சோதனை சாவடிகள் உள்ளன. சுமார் 35 சோதனை சாவடிகள் இயங்கி வருகின்றன.

இவற்றில் களியக்காவிளை, இஞ்சிவிளை, நெட்டா உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் சோதனை சாவடிகள் பிரதான சோதனை சாவடிகளாக உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிக்கிறார்கள்.  சமீப காலமாக குமரி மாவட்டம் வழியாக அதிக பாரம் ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனங்கள் கேரளாவுக்கு செல்வதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

குறிப்பாக டாரஸ் லாரிகளில் மண், கற்கள், எம்சாண்ட் உள்ளிட்டவை  அளவுக்கு அதிகமாக கொண்டு செல்லப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் அவ்வப்போது சோதனை நடத்தி ஓவர்லோடு டாரஸ் லாரிகளை பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில், எல்லையோர சோதனை சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக கூடுதல் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது. பிரதான சோதனை சாவடிகள் வழியாக செல்லும் டாரஸ் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. ஓவர்லோடு இருந்தால் அந்த டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. நேற்றும் சோதனை சாவடிகளில் டாரஸ் லாரிகளை தடுத்து நிறுத்தி, சோதனை நடைபெற்றது. களியக்காவிளை மட்டுமின்றி, மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனை சாவடியிலும் தற்போது சரக்கு வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன.

Related Stories: