×

தொடர் விடுமுறையால் தாவரவியல் பூங்காவில் 55 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: ஓட்டல், காட்டேஜ்கள் நிரம்பி வழிந்தன

ஊட்டி: தொடர் விடுமுறையால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 55 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்தனர். சர்வதேச  சுற்றுலா நகரமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி விளங்கி வருகிறது. இங்கு நிலவும்  குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, ஏப்ரல், மே மாத கோடை சீசன் சமயத்தின் மட்டும்  லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிவார்கள். கடந்த இரு  ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக கோடை விழாக்கள் நடைபெறவில்லை.  தற்போது, கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்துள்ளது. இந்தாண்டுக்கான கோடை சீசன் துவங்கிய நிலையில் சமவெளி பகுதிகளான கோவை,  மேட்டுப்பாளையம் மற்றும் ஈரோடு போன்ற சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கம்  அதிகரித்துள்ளது.

வெயிலில் இருந்து தப்பித்து கொள்வதற்காக சுற்றுலா பயணிகள்  குளு குளு காலநிலை நிலவும் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதேபோல், கேரளா,  கர்நாடக சுற்றுலா பயணிகளும் அதிகளவு ஊட்டியில் குவிகின்றனர். இரு  ஆண்டுகளுக்கு பின்னர் மே மாதத்தில் மலர் கண்காட்சி உள்ளிட்ட கோடை விழா  நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்  புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி என தொடர்ந்து 4 நாட்கள்  விடுமுறை விடப்பட்டது. இதனை தொடர்ந்து, விடுமுறையை கொண்டாடும் வகையில்  கடந்த புதன்கிழமை மாலை முதலே சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்தனர்.  தமிழ் புத்தாண்டு தினமான நேற்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா  பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா மலைச்சிகரம் போன்ற சுற்றுலா  தலங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். இதேபோல், ஊட்டி படகு  இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள்  ஊட்டியில் குவிந்துள்ள நிலையில் லாட்ஜ்கள், ஓட்டல்கள், காட்டேஜ்களில்  பெரும்பாலான அறைகள் நிரம்பின. இதனிடையே, கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறையில்  ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 55 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : With a series of vacations 55,000 tourists flocked to the botanical garden: hotels and cottages were overflowing
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை