பாலம் கட்டும் பணிகள் முடிந்த நிலையில் பாங்காங் ஏரியில் 3 மொபைல் கோபுரம்: ஆக்கிரமிப்பு பகுதியில் சீனாவின் அடுத்த அடாவடி

புதுடெல்லி: சீனாவின் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பாங்காங் ஏரிப்பகுதியில் 3 மொபைல் கோபுர கட்டுமானங்களை சீனா செய்து வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் பாலம் கட்டுமானப் பணியை முடித்துள்ள நிலையில் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா மற்றும்  சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல்கள் ஏற்பட்டது. கல்வான் சம்பவத்துக்குப்  பிறகு, ராணுவத் தளபதிகள் மட்டத்தில் இரு தரப்புக்கும் 15 சுற்றுப்  பேச்சுவார்த்தைகள் நடந்தன. இருப்பினும், பிரச்னைகள் இன்னும் முழுமையாக  தீர்க்கப்படவில்லை.

இந்நிலையில், இந்தியா - சீனா எல்லையில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் சீனா வேகமாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பாங்காங் ஏரியின் மீது சட்டவிரோத பாலம் கட்டி வருகிறது. அது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மறுபுறம், அதேபகுதியில் மூன்று மொபைல் டவர்களும் நிறுவப்பட்டுள்ளன. இதுகுறித்து ஷூஜூல் கவுன்சிலர் கோன்செக் ஸ்டாஷின் வெளியிட்ட பதிவில், ‘சீனப் படையினர் பாங்காங் ஏரியின் மீது பாலம் கட்டி முடித்துள்ளனர். வெந்நீர் ஊற்றுப் பகுதியில் மூன்று மொபைல் கோபுரங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவை இந்தியாவின் எல்லைக்கு மிக அருகில் உள்ளன.

இது கவலைக்குரிய விஷயம் அல்லவா? எங்கள் பகுதிக்கு உட்பட்ட 11 கிராமங்களில் இன்னும் 4ஜி வசதி கூட இல்லை’ என்று தெரிவித்துள்ளார். பாங்காங்கில் பாலம் கட்டப்பட்டு வரும் பகுதி கடந்த 1962ம் ஆண்டு முதல் சீனாவின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறின. பாலம் கட்டும் பணி முடிந்த நிலையில், தற்போது மொபைல் டவர்களை சீனா கட்டி வருவதால், எல்லையில் சீனா தனது அடாவடிகளை தொடங்கியுள்ளது. முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில்  வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் கூறுகையில், ‘லடாக் அருகே சீனாவின் ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: