விடுமுறைகளால் திணறுது கொடைக்கானல் அருவியில் ‘செல்பி’ எடுத்து ஆனந்தம்: சுற்றுலாப்பயணிகள் உற்சாகக் கொண்டாட்டம்

கொடைக்கானல்: தொடர் விடுமுறையின் கடைசி நாளான நேற்று கொடைக்கானலில் பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அருவி மற்றும் பைன் மரக்காடுகளில் சுற்றி செல்பி எடுத்து உற்சாகமாக பொழுது போக்கினர்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. கோடைக்கு முன்பே வெயில் கொளுத்த தொடங்கியுள்ள நிலையில், இங்கு குளிர் சீசன் தொடங்கியுள்ளது. பசுமையான புல்வெளிகள், அருவிகளில் கொட்டும் தண்ணீர், மலைகளை தழுவும் மேகங்கள் என மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை எழிலுடன் திகழ்கிறது. இந்நிலையில், தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி என தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

இதனால், கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். குறிப்பாக கடந்த 2 நாட்களாக அதிகளவில் கூட்டம் கூடியது. மோயர் பாய்ண்ட், ஏரி சாலை உள்ளிட்ட பல சுற்றுலா இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது. நகரில் உள்ள அனைத்து விடுதிகளும் நிரம்பி வழிந்தன. மேலும், நகரில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால், வட்டக்கானல் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பைன் மரக்காடுகளில் பொழுது போக்கினர்.சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ‘‘தொடர் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதை முறைப்படுத்த வேண்டும். சுற்றுலா இடங்களில் வாகன நெரிசலை சீரமைக்க போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும். கார் பார்க்கிங் ஏற்படுத்த வேண்டும். கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்’’ என்றனர்.

Related Stories: