×

தொடர் விடுமுறையால் முதுமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கூடலூர்: சித்திரை விசு, புனித வெள்ளி, ஈஸ்டர் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் விடுமுறையை கொண்டாடும் விதமாக முதுமலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.தொடர் விடுமுறை எதிரொலியாக, நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில், சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் சென்று வன விலங்குகளையும், வனப்பகுதிகளையும் பார்ப்பதற்காக வனத்துறை சார்பில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 நாட்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வாகனம் மூலமாக வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகளையும், வனப்பகுதிகளையும் பார்வையிட்டுள்ளனர்.

மான்கள், காட்டு மாடுகள், யானைகள் போன்றவற்றை பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பார்த்ததாகவும், ஒரு சில சுற்றுலாப் பயணிகள் புலிகளை பார்த்ததாகவும் தெரிவித்தனர். கூட்டம் அதிகரித்ததன் விளைவாக பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளுக்கு வாகன சவாரி செய்ய இடம் கிடைக்கவில்லை. வனப்பகுதிக்குள் செல்ல இடம் கிடைக்காத சுற்றுலாப்பயணிகள் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். முதுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது லேசான மற்றும் கனமழையும் பெய்தது. இந்த மழை காரணமாக, வனப்பகுதிக்குள் வறட்சி குறைந்து பசுமை திரும்பி வருகிறது. அத்துடன் காட்டுத்தீயின் அபாயமும் குறைந்துள்ளது. இதனால், வனப்பகுதிகளில் குளிர்ச்சியான காலநிலையையும் சுற்றுலா பயணிகள் அனுபவிக்க முடிந்தது.இருப்பினும், முதுமலையில் புகழ்பெற்ற யானை சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags : Mudumalai , With a series of vacations Tourists congregate in Mudumalai
× RELATED காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 250 கி.மீ...