×

இயந்திரம் இல்லை... கெமிக்கலும் இல்லை... முழுவதும் கைகளிலேயே தயாராகுது அழகுக்கு அழகு சேர்க்கும் ஆத்தங்குடி டைல்ஸ்

* ஓடை மண்ணும், உள்ளூர் தண்ணீரும் தான் தொழில் ரகசியம்
* புவிசார் குறியீடு விண்ணப்பத்தால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

காரைக்குடி: செட்டிநாட்டு பாரம்பரிய சின்னமாக விளங்கும் ஆத்தங்குடி டைல்ஸ் கற்களுக்கு புவிசார் குறியீடு பெற ஒன்றிய அரசுக்கு விண்ணப்பம் செய்துள்ளதற்கு உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கானாடுகாத்தான், செட்டிநாடு, பள்ளத்தூர், கொத்தமங்கலம் மற்றும் தேவகோட்டை, நாட்டரசன்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ராயவரம் உள்ளிட்ட 75 ஊர்கள் செட்டிநாடு என அழைக்கப்படுகின்றன. இங்கு பழமையான செட்டிநாட்டு அரண்மனைகள் உள்ளன. பாரம்பரிய கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த அரண்மனைகளுக்கு மேலும் அழகு சேர்ப்பது தரையில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ், மொசைக், கிரானைட் கற்கள். இதில் பெரும்பாலான வீடுகளில் ஆத்தங்குடி டைல்ஸ் கற்களையே பயன்படுத்தியுள்ளனர்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிக்கப்பட்டு வரும் ஆத்தங்குடி டைல்ஸ் தனித்துவம் வாய்ந்தது. இவற்றை ஆத்தங்குடியில் கிடைக்கும் ஓடை மண்ணை பயன்படுத்தி முற்றிலும் கைகளாலேயே கெமிக்கல்கள் இன்றி தயாரிக்கின்றனர். இக்கற்கள் அந்தந்த தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாறும் தன்மையுடையன. தவிர வீடுகளில் பதிக்கப்படும் தரைக்கற்களால் வரும் கால்வலி, மூட்டுவலி போன்றவை இதில் ஏற்படாது எனவும் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆத்தங்குடி டைல்ஸ் உற்பத்தியில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதனை நம்பி 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.ஆத்தங்குடி டைல்ஸ்சில் ஏரோபிளேன் மாடல், டைமண்ட் பார்டர், வட்டதாமரை, பூ சொக்கட்டான், மல்லிகை மொட்டு, வளவுகமலம் உள்பட பாரம்பரிய டிசைன்கள் தயாரிக்கப்படுகின்றன. தவிர தற்போதுள்ள நவீன காலத்துக்கு ஏற்ப புள்ளிகள், கிரானைட் டிசைன் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அனைத்து டிசைன்கள் என 500க்கும் மேற்பட்ட டிசைன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தகைய பெருமைமிக்க ஆத்தங்குடி டைல்ஸ் கற்களுக்கு புவிசார் குறியீடு கோரி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலுக்கான தொழில்நுட்ப மேம்பாடு மையம், செட்டிநாடு ஆத்தங்குடி ஹெரிடேஜ் தரை கற்கள் உள்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு ஆகியவை இணைந்து ஒன்றிய அரசுக்கு விண்ணப்பம் செய்துள்ளன. இதற்கு உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஆத்தங்குடி பூக்கல் உற்பத்தியாளர் நடராஜன் கூறுகையில், ‘‘ஆத்தங்குடி டைல்ஸ் கற்களை பொறுத்தவரை இயந்திரத்தை பயன்படுத்தாமல் முற்றிலும் கைகளாலேயே உற்பத்தி செய்கிறோம். இங்கு கிடைக்கும் ஓடை மண் மற்றும் எங்கள் பகுதி தண்ணீரே இந்த டைல்ஸ் கற்களின் தனித்தன்மைக்கு காரணம். கெமிக்கல் சேர்ப்பது இல்லை. ஒயிட் சிமெண்ட் மற்றும் ஆக்சைடு சேர்த்து கைகளால் செய்கிறோம். பூக்கல் தயாரிக்க முதலில் கண்ணாடி வைத்து அதில் அவுட்டர் பிரேம் வைக்கப்படும். பின்னர் தேவையான டிசைன் பிரேமை வைத்து கலர் பெயின்ட் ஊற்றவேண்டும். அதன்பின்னர் ஓடை மண், சிமெண்ட் கலவையை போட்டு கல் உற்பத்தி செய்யப்படும். இந்த கல்லை 3 நாட்கள் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின்னர் 10 நாட்கள் நிழலில் வைக்கவேண்டும். 13 முதல் 14 நாட்களுக்கு பின்னரே ஒரு டைல்ஸ் உற்பத்தி செய்ய முடியும். இதனை வீடுகளில் மணல், சுண்ணாம்பு, சிமெண்ட் கலந்து பதிக்கிறோம். 500 ஆண்டுகளாக பாரம்பரிய முறையிலேயே இதனை உற்பத்தி செய்து பதித்தும் வருகிறோம்.

இதனை பராமரிப்பது மிக எளிது. பராமரிக்க பராமரிக்க பாலீஷ் கூடும். சென்னை, பெங்களூரு, மும்பை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இக்கற்கள் அனுப்பப்படுகின்றன. பிரபல ஸ்டார் ஓட்டல்களில் இதனை பதித்துள்ளனர். தவிர முக்கிய விஐபிக்கள் பலரது வீடுகளில் தற்போது அதிகளவில் பதித்து வருகின்றனர். செட்டிநாடு கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில் பாரம்பரிய சின்னமான ஆத்தங்குடி டைல்ஸ்க்கு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது ஒன்றிய அரசுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் மிகவும் வரவேற்கக் கூடியது. ஒன்றிய அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து வழங்க வேண்டும். இதன் மூலம் இத்தொழில் மேலும் வளர்ச்சியடையும். ஏராளமான தொழிலாளர்கள் பயன்பெறுவர்’’ என்றார்.

Tags : Athangudi Tails , No machine ... no chemicals ... all ready by hand Athangudi Tiles
× RELATED தாம்பரம் அருகே மதுபோதையில் தாறுமாறாக...