2 ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில் ஏற்காடு கோடை விழா ஏற்பாடுகள் தீவிரம்

சேலம்: சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஏற்காடு, `ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படுகிறது. ஏற்காட்டின் மத்தியில் அமைந்துள்ள ஏரியில் படகு இல்லம், மான் பூங்கா, அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், கிளியூர் நீர்வீழ்ச்சி, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் மலைக்கோயில் உள்பட பல்வேறு சுற்றுலா பகுதிகள் உள்ளன. இதனால், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வருகை தருவார்கள்.

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அப்போது, மலர் கண்காட்சி, கால்நடைகள் கண்காட்சி, கோலப்போட்டி, சமையல் போட்டி, படகு போட்டி மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்படும். இதனிடையே, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில், கொரோனா பரவல் ஆரம்பமானது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் ஒருபகுதியாக, பொதுமக்கள் கூடுவதை தடுக்கும் வகையில், கடந்த 2 ஆண்டுகளாக ஏற்காடு கோடைவிழா நடத்தப்படவில்லை.

இந்நிலையில் தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, நடப்பாண்டு ஏற்காடு கோடை விழா நடத்தப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் தோட்டக்கலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, மலர் கண்காட்சியில் வைக்க, லட்சக்கணக்கான செடிகளும், பூந்தொட்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடை விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

ஏற்கனவே, கடந்த 2 மாதத்திற்கு முன்பு புதிதாக செடிகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது. பூந்தொட்டியில் உள்ள செடிகள் பூக்க தொடங்கியுள்ளன. நடப்பாண்டு கோடை விழாவிற்கென, சுமார் 3 லட்சம் செடிகளும், 10 ஆயிரம் பூந்தொட்டிகளும் தயார் நிலையில் உள்ளன என்றனர்.

Related Stories: