×

கொரோனாவால் 2 ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில் ஏற்காடு கோடை விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்: லட்சக்கணக்கான செடிகள், பூந்தொட்டிகள் தயார்

சேலம்: சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான ஏற்காடு, `ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படுகிறது. ஏற்காட்டின் மத்தியில் அமைந்துள்ள ஏரியில் படகு இல்லம், மான் பூங்கா, அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், கிளியூர் நீர்வீழ்ச்சி, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் மலைக்கோயில் உள்பட பல்வேறு சுற்றுலா பகுதிகள் உள்ளன. இதனால், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வருகை தருவார்கள். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அப்போது, மலர் கண்காட்சி, கால்நடைகள் கண்காட்சி, கோலப்போட்டி, சமையல் போட்டி, படகு போட்டி மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்படும்.

இதனிடையே, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில், கொரோனா பரவல் ஆரம்பமானது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் ஒருபகுதியாக, பொதுமக்கள் கூடுவதை தடுக்கும் வகையில், கடந்த 2 ஆண்டுகளாக ஏற்காடு கோடைவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, நடப்பாண்டு ஏற்காடு கோடை விழா நடத்தப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் தோட்டக்கலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, மலர் கண்காட்சியில் வைக்க, லட்சக்கணக்கான செடிகளும், பூந்தொட்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும், கோடைவிழா நடத்துவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே, அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்படும். அப்போது தான், கோடை விழா சமயத்தில் வித்தியாசமான, புதுப்புது செடிகள் மற்றும் பூந்தொட்டிகள் தயார் செய்யமுடியும்.

கடந்த இரு ஆண்டுகளாக கொரோனாவால், கோடைவிழாவை நடத்த முடியாமல் போனது. நடப்பாண்டு, வழக்கம் போல மே இறுதி வாரத்தில், கோடைவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கோடை விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. ஏற்கனவே, கடந்த 2 மாதத்திற்கு முன்பு புதிதாக செடிகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது. பூந்தொட்டியில் உள்ள செடிகள் பூக்க தொடங்கியுள்ளன. நடப்பாண்டு கோடை விழாவிற்கென, சுமார் 3 லட்சம் செடிகளும், 10 ஆயிரம் பூந்தொட்டிகளும் தயார் நிலையில் உள்ளன.

குறிப்பாக, மேரி கோல்டு, ஜினியா, காஸ்மாஸ், ஆந்தூரியம், கிரிசோந்தியம், சன்பிளவர், பேன்சிஸ், பிரஞ்ச் ேமரி கோல்டு, வின்சா, ஆர்ச்சர், கேலன்டலா, கைஜீனியா, டயாண்டஸ், லுப்பிகஸ், பால்சம், கோழிகொண்டை, டேலியா, சால்வியா, ரோஜா என சுமார் 30க்கும் மேற்பட்ட வகையிலான பூச்செடிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் காய்கறி கண்காட்சி, பழங்களால் ஆன அலங்கார வளைவு, பூக்களால் ஆன சிற்பங்கள் நிறுவ ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வியாபாரிகள் உற்சாகம்
ஏற்காட்டை சுற்றிலும் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள நூற்றுக்கணக்கானவர்கள் படகு இல்லம், அண்ணா பூங்கா, லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், கிளியூர் நீர்வீழ்ச்சி என ஏற்காட்டின் பல்வேறு பகுதிகளில் சாலையோர கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் மே மாதத்தில் நடக்கும் ஏற்காடு கோடை விழாவே, இவர்களுக்கான பிரதான வியாபார காலமாக இருந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கோடை விழா நடக்காததால், இவர்களின் அன்றாட வியாபாரம் பாதிக்கப்பட்டு, பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகினர். நடப்பாண்டு கோடை விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருவதால், வியாபாரிகள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், அங்குள்ள தங்கும் விடுதிகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோடைவிழாவிற்காக தயாராகி வருகிறது.


Tags : Yercaud Summer Festival ,Corona , Preparations for Yercaud Summer Festival intensify as it has not been conducted by Corona for 2 years: Millions of plants and flower pots ready
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...