இன்று உலக பாரம்பரிய தினம் என்பதால் அனுமதி இலவசம்: மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

மாமல்லபுரம்: உலக பாராம்பரிய தினத்தை முன்னிட்டு, புராதான சின்னங்களை பார்க்க இலவசம் என அறிவித்திருந்ததால், மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மாலையில் இன்னும் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம், முழுவதும் உலக பாரம்பரிய தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம், சுற்றுலா பயணிகள், பொது மக்களிடையே தங்களது சமூக கலாச்சார பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது.

இதையொட்டி, இன்று சுற்றுலா பயணிகள், புராதன சின்னங்களை இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் தெரிவித்திருந்தார். அதன்படி மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை சுற்றி பார்க்க இன்று ஏராளமானோர் குவிந்தனர். காலை 7 மணி முதலே இயற்கை காற்றை சுவாசித்தபடி புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். அங்குள்ள வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில், புலி குகை உள்ளிட்ட சிற்பங்களை பார்வையிட்டு அதன்முன்பு புகைப்படங்களும், செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.

சிலர், குடும்பம் குடும்பமாக வருகை தந்து, தாங்கள் கொண்டு வந்த உணவை பரிமாறி மகிழ்ந்தனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இன்று காலை முதலே வர தொடங்கினர். 4 நாள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று அலுவலக பணிகள், பள்ளி, கல்லூரிகள் இயங்கியதால் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. மாலையில் கூட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: