அதிரடி பேட்ஸ்மேன்களை பயமுறுத்துவதே என் வேலை: உம்ரான் மாலிக் சொல்கிறார்

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நேற்று மாலை நடந்த 28வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில், 4 ஓவரில் 28 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் ஆட்டநாயகன் விருது பெற்றார். மேலும் ஐபிஎல்லில் கடைசி ஓவரை மெய்டனாக வீசிய 4வது வீரர் என்ற சிறப்பு பெற்றார். அவர் கூறியதாவது: நான் யார்க்கரையும், பேட்ஸ்மேன்கள் உடலை நோக்கியும் பந்துவீச முயற்சித்தேன்.

அதிரடியாக அடிப்பவர்களை பயமுறுத்துவதே என் வேலை. 2018 வரை டென்னிஸ்பால் கிரிக்கெட் விளையாடி வந்தேன், 3 ஆண்டுகளுக்கு முன் லெதர் பந்தைக் கொண்டு பயிற்சி செய்யத் தொடங்கினேன். என்னுடன் பயிற்சியில் ஈடுபட்ட அப்துல்சமத், என்னை நெட் பவுலராக ஐதராபாத் அணியில் சேர்த்தார். எங்கள் பகுதியில் (ஜம்மு) 130-140 கிமீ வேகத்தில் பந்துவீசக்கூடிய திறமையான பந்துவீச்சாளர்கள் ஏராளமானோர் உள்ளனர், என்றார்.

Related Stories: