×

ஜோர்டன் யார்க்கர் பந்துகள் வீசியிருக்க வேண்டும்: கேப்டன் ஜடேஜா புலம்பல்

புனே: ஐபிஎல் தொடரில் புனேவில் நேற்று நடந்த 29வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் மோதின. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஆடாத நிலையில் ரஷித்கான் குஜராத் அணியை வழிநடத்தினார். டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 73 (48 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), அம்பதிராயுடு 46 (36பந்து), கேப்டன் ஜடேஜா 22, ஷிவம் துபே 19 ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய குஜராத் அணியில் சுப்மான் கில் 0, வழக்கம் போல் விஜய் சங்கர் 0, விருத்திமான் சகா 11, அபினவ் மனோகர் 12, ராகுல் திவாட்டியா 6 ரன்னில் வெளியேறினர். 87 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்த நிலையில் டேவிட்மில்லருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரஷித்கான் அதிரடியில் மிரட்டினார்.

கடைசி 3 ஓவரில் 48 ரன் தேவைப்பட்ட நிலையில் ஜோர்டன் வீசிய 18வது ஓவரில் ரஷித்கான் 3 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 25 ரன் கொடுத்ததால் வெற்றி சென்னையை விட்டு கைநழுவியது. 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன் எடுத்த குஜராத் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஷித்கான் 21 பந்தில் (2 பவுண்டரி, 3 சிக்சர்) 40 ரன்னில் ஆட்டம் இழந்தார். நாட்அவுட்டாக டேவிட் மில்லர் 51 பந்தில் 8 பவுண்டரி, 6 சிக்சருடன் 94 ரன் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். சென்னை பந்துவீச்சில் பிராவோ 3 விக்கெட் வீழ்த்தினார். 6வது போட்டியில் 5வது வெற்றி பெற்ற குஜராத் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்தது. சென்னை 5வது தோல்வியை தழுவியது. வெற்றிக்கு பின் குஜராத் கேப்டன் ரஷித்கான் கூறுகையில், அணிக்கு கேப்டனாக வேண்டும் என்பது எனது கனவு. ஆனால் ஒட்டுமொத்த வெற்றி அதை மறக்க முடியாததாக மாற்றியது. கடைசி 7 ஓவரில் 90 ரன் துரத்த முடிந்தது, அதுதான் திட்டம். ஒரு பேட்ஸ்மேன் குறைவாக இருந்தாலும் எங்களிடம் நல்ல கீழ்வரிசை உள்ளது.

எங்களால் பந்தை மிகவும் கடினமாக அடிக்க முடியும். முதல் 5 போட்டியில் நான் பேட் செய்யவில்லை. நான் என்னை ஒரு ஆல்ரவுண்டராக கருதுகிறேன். அந்த பொறுப்பை நிறைவேற்ற விரும்புகிறேன். ஜோர்டன் வீசிய 18வது ஓவரில் 20 ரன் எடுத்தால் கடைசி 2 ஓவரில் 30 ரன்னை விரட்டலாம் என மில்லர் சொன்னார். அதிர்ஷ்டவசமாக அவர் நான் விரும்பிய இடத்தில் பந்து வீசியதால் அடித்து நொறுக்கினேன், என்றார். சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா கூறுகையில், “இந்த போட்டியை நாங்கள் மிக சிறப்பாக துவங்கினோம். பந்துவீச்சின்போது முதல் 6 ஓவர் மிக சிறப்பாக செயல்பட்டோம். பின்னர் நாங்கள் வைத்திருந்த திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை என்பதே உண்மை. குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் எங்களது திட்டங்களை செயல்படுத்த தவறிவிட்டோம். ஜோர்டன் யார்க்கர் பந்துகள் வீசியிருக்க வேண்டும், ஆனால் அதை அவர் செய்ய தவறிவிட்டார்.  டி.20 போட்டிகளில் இதுபோன்று நடப்பது இயல்பானது தான்” என்றார்.

Tags : Jordan Yorker ,Jadeja , Jordan Yorker should have thrown the balls: Captain Jadeja laments
× RELATED நைட் ரைடர்சை வீழ்த்தியது சிஎஸ்கே: ஜடேஜா அபார பந்துவீச்சு