×

உக்ரைன் போர் எதிரொலி!: உலகில் ஐந்தில் ஒருவர் பட்டினியில் வீழும் அபாயம்..ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கவலை..!!

ஜெனிவா: உக்ரைன் போர் எதிரொலியாக உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒருபகுதியினர் வறுமையிலும், பட்டினியிலும் தவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. உக்‍ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 7வது வாரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கிழக்கு பகுதியில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரஷ்யாவுக்‍கு எதிராக உக்‍ரைன் வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அமெரிக்‍கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய ராணுவ தளவாடங்களுடன் உக்‍ரைன் வீரர்கள் எதிர்தாக்‍குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், செக் குடியரசு பத்திரிக்கை ஒன்றுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், உக்ரைனில் போர் நடந்துக் கொண்டிருந்தாலும் அது உலகெங்கும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக வளரும் நாடுகளே அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக  குட்டரஸ் தெரிவித்தார். உலகின் கோதுமை மற்றும் பார்லி தேவையில் 30 சதவீகிதத்தையும், சோள தேவையில் 20 சதவீகிதத்தையும், சூரியகாந்தி எண்ணெயில் 50 சதவீகிதத்தையும் உக்ரைனும், ரஷ்யாவும் மட்டுமே பூர்த்தி செய்து வந்ததாகவும், ஆனால் அது இப்போது தடை பட்டிருப்பதாகவும் குட்டரஸ் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் விலை 60 சதவீதம் வரை அதிகரித்துள்ள நிலையில், எரிவாயு, உரங்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் குறிப்பிட்டார். இதனால் 170 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒருபகுதியினர் வறுமையிலும், பட்டினியிலும் தள்ளப்படும் சூழல் எழுந்துள்ளதாக கூறினார். இதுபோன்ற சூழலில் பணக்காரர்கள் சொத்து மதிப்பு மேலும் பெருகி, ஏழைகள் மேலும் வறுமையில் வீழ்வதை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Tags : Ukraine ,UN ,General ,Cooler ,Antonio Quarres , Ukraine war, famine, UN Secretary General Antonio Guterres
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...