×

போடி அருகே வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால் வறண்டு கிடக்கும் வடக்கத்தியம்மன் குளம்: 18ம் கால்வாய் தண்ணீரை தேக்க கோரிக்கை

போடி: போடி அருகே, வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால், வடக்கத்தியம்மன் குளக் கண்மாய் வறண்டு கிடக்கிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, 18ம் கால்வாய் தண்ணீரை தேக்கி பாசனத்துக்கு பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
போடி அருகே சிலமலை, ராசிங்காபுரம் கிராமங்களுக்கு இடையே, கிழக்குப் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் வடக்கத்தியம்மன் கண்மாய் அமைந்துள்ளது. ராசிங்காபுரம் ஒண்டிவீரன்சாமி கோயில் மற்றும் மேற்குமலைப் பகுதியில் மழை பெய்யும் காலங்களில் 8 கி.மீ தூரமுள்ள கால்வாய் மூலம் வடக்கத்தியம்மன் கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்படும். இந்த கண்மாயில் நீர்நிரம்பினால் 6 மாதங்களுக்கு தண்ணீர் வற்றாமல் இருக்கும்.

இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்து, அருகில் உள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து 500 ஏக்கர் பாசன வசதி பெறும். மேலும், இக்கண்மாய் பல்வேறு கிராமங்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வந்தது. இந்நிலையில், போதிய் மழை இல்லாததாலும், நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பாலும், பல ஆண்டுகளாக கண்மாய்க்கு நீர்வரத்து இல்லை. கனமழை காலங்களில் கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்படும். அவை சிலநாட்களில் வற்றிப் போகும். இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் 18ம் கால்வாய் நீட்டிப்பு திட்டத்தில் இந்த கால்வாய் இணைக்கப்பட்டது. இதற்கான பணிகள் நடந்தும், வடக்கத்தியான் குளத்தை மறந்து விட்டனர். இதனால், 8 கி.மீ வரத்துக் கால்வாய் மற்றும் கண்மாய் பகுதிகளை ஆக்கிரமித்து விளைநிலங்களாக மாற்றிவிட்டனர்.

இந்நிலையில், கண்மாய்க்கு வரும் 8 கி.மீ வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், வடக்கத்தியம்மன் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, 18ம் கால்வாய் தண்ணீரை தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து விவசாயி முருகன் கூறுகையில், ‘60 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் பாசனத்திற்காக இந்த கண்மாயை வெட்டினர். இதில் மழைநீரை தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர். கிராமங்களின் குடிநீருக்கும் பயன்பட்டு வந்தது. போதிய மழை இல்லாததாலும், நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பாலும் கண்மாய் நீர்வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது. எனவே, 18ம் கால்வாய் தண்ணீரை தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : North Yamman Pond ,Bodi ,18th Canal Water Request , Vadakkathiyamman Lake dries up due to occupation of Varadhu canal near Bodi: 18th canal water stagnation demand
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்