அறுவடை நேரத்தில் மரவள்ளி கிழங்குக்கு விலை இல்லை: திண்டுக்கல்லில் விவசாயிகள் கவலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மரவள்ளி கிழங்குக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல்லை சுற்றியுள்ள குட்டத்துப்பட்டி, குட்டத்து ஆவாரம்பட்டி, மைலாப்பூர், ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், உலகம்பட்டி, காப்பிலியபட்டி, கள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி அதிகமாக நடக்கிறது. டிசம்பர் முதல் ஏப்ரல் வரை அறுவடைக் காலம். இந்த சமயங்களில் மரவள்ளிக்கிழங்கை ஜவ்வரிசி ஆலைகள் மொத்தமாக வாங்கிச் செல்லும். இந்நிலையில், மரவள்ளிக் கிழங்கின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் ஒரு டன் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது. மரவள்ளி பாயிண்ட் ரூ.300 என விலை கேட்கப்பட்டது. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில், தற்போது ஒரு டன் ரூ.5 ஆயிரத்துக்கும் மட்டும் விற்பனையாகிறது. பாயிண்ட் ரூ.225 என்ற விலை கேட்கப்படுகிறது. இதற்கேற்ப 90 கிலோ ஜவ்வரிசி மூட்டை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,800 வரை விற்பனையானது.

 ஸ்டார்ச் மாவு 90 கிலோ மூட்டை ரூ.2,400 முதல் ரூ.2,700 வரை விற்பனையானது. மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து உலகம்பட்டி விவசாயி ஆபிரகாம் கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் மரவள்ளிக் கிழங்கிற்கு உரிய விலை கிடைக்கவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், உரிய விலை கிடைக்கவில்லை. இந்தாண்டு சுமார் 1 ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து ‌‌ தற்போது கிலோ ரூ.9 முதல் 10 வரை கேரளா வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்கின் தரத்தைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது’ என்றார்.

Related Stories: