உக்ரைன் ராணுவ வீரர்கள் 23,300 பேர் கொன்று குவிப்பு.. 470 டிரோன்கள்,998 பீரங்கி துப்பாக்கிகள் தாக்கி அழிப்பு : ரஷ்யா ராணுவ அமைச்சகம்

கீவ் : மனிதாபிமான மற்ற முறையில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, உக்ரைன் மக்களை கொன்று குவித்து வருவதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 54வது நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைன் கிழக்கு பகுதியில் உள்ள முக்கிய தொழில் நகரங்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு, தெற்கு உக்ரைனில் உள்ள 8 முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா பலமுனை தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் பல இடங்களில் ஒவ்வொரு முறை குண்டு சத்தம் கேட்கும் போதெல்லாம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்தை நோக்கி மக்கள் தப்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி, கிழக்கு பகுதியில் டான்பாஸ் பிராந்தியத்தில் முற்றிலும் அழித்து தன்னிச்சை பகுதியாக உருவாக்க ரஷ்யா முயற்சி செய்து வருவதாக கூறினார். ரஷ்ய படைகளின் கோர தாக்குதலில் மரியுபோல் நகரம் முற்றிலுமாக உருக்குலைந்தது. மரியுபோலில் உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடையுமாறு ரஷ்ய படைகள் கெடு விதித்துள்ளது. கெடுவை உக்ரைன் வீரர்கள் புறக்கணித்ததால் ரஷ்யா உச்சகட்ட தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனின் முக்கிய பகுதியான செர்னிவ் நகரை ரஷ்ய படைகள் நாசம் செய்துள்ளன. இதனிடையே உக்ரைன் ராணுவ வீரர்கள் 23,300 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என ரஷ்யா ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. மரியுபோல் நகரில் மட்டும் 4,000 துருப்புகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனுக்கு சொந்தமான 470 டிரோன்கள்,998 பீரங்கி துப்பாக்கிகள் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

Related Stories: