×

தொடர் விடுமுறையால் ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள் : குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

ஜோலார்பேட்டை: தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலையில் நேற்று சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து பல்வேறு பொழுதுபோக்கு இடங்களை கண்டு களித்தும், படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 1,800 அடி உயரம் கொண்ட ஏலகிரி மலையில், நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. மேலும் 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைப்பாதை, ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிற்கும் தமிழ் புலவர்கள் மற்றும் கொடை வள்ளல்கள் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேலும் கொண்டை ஊசி வளைவுகளில் ஆங்காங்கே பார்வை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் பார்வை மையம் உள்ள மலை உச்சி பகுதியில் இருந்து கீழே தெரியும் படர்ந்த கிராமங்களையும், நகரங்களையும் கண்டுகளித்து மகிழ்கின்றனர்.

மேலும் எந்தக் காலத்திலும் ஒரேமாதிரியான சீதோசன நிலை நிலவுவதால் கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், நாள்தோறும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மேலும் அங்குள்ள படகுத்துறை, சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா, மூலிகைப் பண்ணை, முருகன் கோயில், ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, நிலாவூர் கதவ நாச்சியம்மன் கோயில் மற்றும் தனியார் பொழுதுபோக்கு கூடங்கள் போன்றவற்றை குடும்பத்துடன் வந்து கண்டு மகிழ்கின்றனர். இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக அரசு விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் குவிந்தனர். மேலும் அங்குள்ள பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களை தங்களது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் கண்டு களித்தும், படகு சவாரி செய்தும் செல்பி எடுத்து உற்சாகமடைந்தனர்.

மேலும் சிறு குழந்தைகள் அங்குள்ள சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இயற்கை பூங்காவில் உள்ள பல்வேறு இடங்களையும் நீரூற்று பகுதியையும் கண்டு உற்சாகமடைந்தனர். மேலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய உணவுகள் பழ வகைகள், சாக்லேட்டுகள் போன்றவை விற்பனையில் உள்ளதால் அனைவரும் வாங்கி செல்கின்றனர். இதனால் அங்குள்ள மலைவாழ் மக்களின் பல்வேறு வியாபாரிகள் வணிகர்கள் உள்ளிட்டோருக்கு சுற்றுலா பயணிகளால் வருவாய் ஈட்டக்கூடிய ஒரு தளமாக இருந்து வருகிறது.

விலங்குகள் பண்ணை அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றுலாத்தலமாக ஏலகிரி மலை மட்டுமே உள்ளது. இங்கு சென்னை வண்டலூர் பகுதியில் உள்ள விலங்குகள் பண்ணை போன்று ஏலகிரி மலையிலும் யானை, மான், சிங்கம், புலி, சிறுத்தை, மயில், பாம்பு, முதலை உள்ளிட்ட காட்டு விலங்குகள் பண்ணைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், 100 ஏக்கரில் தாவரவியல் பூங்கா அமைக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் கிடப்பில் போடப்பட்ட பணியை தொடங்கி, ஏலகிரி மலை சுற்றுலா தளத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Elagiri , Tourists flock to Yelagiri Hills for a series of holidays : Enjoyed a boat ride with the family
× RELATED ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் தடம் புரண்டது