×

சிவகாசியில் கேரளா பலாப்பழம் விற்பனை ஜோரு

சிவகாசி: சீசன் தொடங்கியதால் சிவகாசியில் கேரள பலாப்பழம் விற்பனை சூடுபிடித்துள்ளது.முக்கனிகளின் பட்டியலில் மாங்கனிக்கு அடுத்ததாக, 2வது இடத்தில் இருப்பது பலாப் பழம். 3வது இடத்தில் உள்ள வாழைப் பழத்துக்கு சீசன் எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால், மாம்பழமும், பலாப் பழமும் குறிப்பிட்ட சீசன் நாட்களில் மட்டுமே கிடைக்கும். இதனால், மா, பலா மீது மக்களுக்கு ஆர்வம் அதிகம். இவற்றில் பலாப்பழம் பலராலும் விரும்பி சாப்பிடப்படும் பழவகையாகும். தற்போது பலாப்பழம் சீசன் துவங்கி விட்டதால் மக்களின் ரசனை பலாப்பழம் மீது விழுந்துள்ளது. பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால், சிவகாசியில் பலாப்பழம் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பண்ருட்டி, கொடைக்கானல், தர்மபுரி மற்றும் கேரளா பகுதிகளில் பலாப்பழம் விளைச்சல் அதிகம் உள்ளது. கேரளா மற்றும் பண்ருட்டி பகுதியில் இருந்து பலாப்பழங்கள் விற்பனைக்காக சிவகாசியில் குவிக்கப்பட்டுள்ளது. கிலோ ரூ.200, ரூ.240 வரை விற்பனை செய்யப்படுகிறது. பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளதால் அதிகளவில் மக்கள் விருப்பத்துடன் பலாப்பழத்தை வாங்கி செல்கின்றனர்.

பழ வியாபாரி பாஸ்கர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது கேரளா பலாப்பழங்கள் வரத்து துவங்கி உள்ளது. சிவகாசியில் கோடையை முன்னிட்டு மாம்பழம், வெள்ளரிக்காய், தர்பூசணி மற்றும் முலாம் பழங்கள் நல்ல விற்பனையில் இருந்தன. இந்நிலையில், கேரளா மாநிலத்தில் இருந்தும் வடமாவட்டங்களி்ல் இருந்தும் பலாப்பழம் வரத்து துவங்கியுள்ளது. பலாப்பழத்தை வாங்க, பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால், நன்றாக விற்பனையாகிறது. பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலு பெறும். வாத நோய், பைத்தியம் போன்றவை நீங்கும். பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தை தரும். நரம்புகளை உறுதியாக்கும். ரத்தத்தை விருத்தி செய்யும். தொற்றுக் கிருமிகளை அழிக்கும். பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும், என்றார்.

Tags : Kerala ,Sivakasi , Kerala jackfruit sales are booming in Sivakasi
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...