×

உலக சுகாதார நிறுவன கணக்கீட்டு முறை இந்தியாவுக்கு பொருந்தாது... கொரோனா மரணங்கள் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதிலடி!!

டெல்லி : கொரோனா மரணங்களை ஒன்றிய அரசு மறைத்துவிட்டதாக சர்ச்சை வெடித்துள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டு முறை குறித்து ஒன்றிய அரசு கேள்வி எழுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 40 லட்சம் பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனம், கொரோனா உயிரிழப்பு குறித்த விவரங்களை பகிர்வதில் பாஜக அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் உண்மையாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதை பொதுவெளியில் வெளியிட முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ் தலைவர் முன்னாள் ராகுல் காந்தி, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

அவரது இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொரோனா  மரணங்கள் தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டு முறை குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா இறப்பு குறித்து வல்லரசு நாடுகள் தரும் தகவல்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் உலக சுகாதார நிறுவனம், வெவ்வேறு புவியியல் அமைப்பு கொண்ட நாட்டில் வழக்கமான கணிதவியல் முறையில் கொரோனா மரணங்களை கணிக்கிடுவதாக சாடியுள்ளது.

10 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட துனிசியா போன்ற சிறிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் கணக்கீட்டு முறை, இந்தியாவுக்கு எப்படி பொருந்தும் என்று கேள்வி எழுப்பியுள்ள ஒன்றிய அரசு, இது தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு உலக சுகாதார நிறுவனம் விளக்கமோ பதிலோ தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளது. கணிதவியல் கோட்பாடு முளை இந்தியாவுக்கு பொருந்தவே பொருந்தாது என கூறியுள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், உலக சுகாதார அமைப்பின் கணக்கிடுதலுடன் முரண்படுவதாகவும் தெரிவித்துள்ளது. கொரோனா மரணங்களை மறைக்க ஒன்றிய அரசுக்கு அவசியம் இல்லை என்றும் அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை எனவும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.


Tags : World Health Institute ,India ,Union Government ,Corona Death , World Health Organization, calculation, method, India, corona, deaths
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...