தருமபுரி ஆதின நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றால் போராட்டம் நடத்தப்படும்!: பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கூட்டாக எச்சரிக்கை..!!

மயிலாடுதுறை: தருமபுரி ஆதின நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றால் போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கர விழாவில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரி ஆதீனத்தின் 27வது குருமகாசன்னிதானத்தில் உள்ள ஞானசம்பந்தர் நாளை ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார். இந்த யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைக்க இருப்பதற்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் உரிமை இயக்கம், மீத்தேன் திட்டம் எதிர்ப்பு கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ரவியை வைத்து ஆதீன நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று ஆதீன நிர்வாகத்திலும் அவர்கள் மனு அளித்துள்ளார்கள். எதிர்ப்பை மீறி தருமபுரி ஆதீன நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்றால் மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போராட்ட எச்சரிக்கையை தொடர்ந்து, அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். அதேநேரத்தில் ஆளுநருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க உள்ளதாக பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.

Related Stories: