வரும் டிசம்பருக்குள் நீர்வளத்துறையில் 37 பொறியாளர்கள் ஓய்வு: முதன்மை தலைமை பொறியாளர், செயலாளருக்கு கடிதம்

சென்னை: நீர்வளத்துறையில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் 37 பொறியாளர்கள் ஓய்வு பெற உள்ளதாக முதன்மை தலைமை பொறியாளர், துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, நீர்வளத்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வயது முதிர்வின் காரணமாக அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு பணியாளர்களின் வயதினை 59-லிருந்து 60 என உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. இந்தாள் வரையில் பொதுப்பணித்துறையில் கட்டிட அமைப்பில் மற்றும் நீர்வள ஆதாரத்துறையில் பணிபுரிந்து வந்த ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவைச் சார்ந்த அலுவலர்களுக்கு ‘நியமன அலுவலர்’ அரசு, பொதுப்பணித்துறை என்பதால், அலுவலர்கள் வயது முதிர்வின் காரணமாக அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதித்து மற்றும் தன் விருப்ப ஓய்வில் செல்ல அனுமதித்தும் அரசிடமிருந்து உரிய அரசாணைகள் அலுலகத்தில் பெறப்பட்டு வந்தது.

பொதுப்பணித்துறையின் கீழ் கட்டிடம் மற்றும் நீர்வள ஆதார அமைப்பு என ஒன்றாக இயங்கி வந்த அமைப்பு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை என பிரிக்கப்பட்டு, நிர்வாக ரீதியாக தனித்தனியாக இயங்க ஆணை வழங்கப்பட்டு தற்போது தனியாக துறை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அரசாணையினை தொடர்ந்து நீர்வளத்துறையில் பணிபுரிந்து வரும் தலைமைப் பொறியார்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள், முதன்மை பணியாளர் அலுவலர், உதவி செயற் பொறியாளர்கள் மற்றும் தலைமை வரை தொழில் அலுவலர்களுக்கு மட்டும், வயது முதிர்வின் காரணமாக அரசு பணியிலிருந்து ஒய்வு பெற அனுமதிக்கும் அரசாணையினை வழங்கும் பொருட்டு 2002ம் ஆண்டில் மே மாதம் முதல் டிசம்பர் 2022 முடிய ஓய்வு பெறவுள்ள ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு அலுவலர்களின் விவரங்கள் அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன்படி மே மாதத்தில் 20 பேரும், ஜூன் மாதத்தில் 8 பேர், ஜூலை மாதத்தில் 4 பேரும், செப்டம்பர் மாதத்தில் 2 பேர், அக்டோபர் மாதத்தில் 3 பேர் என மொத்தம் 37 பொறியாளர்கள் ஓய்வு பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: