×

வழி கேட்ட மாற்றுத்திறனாளிகள் மீது கடும் தாக்குதல் போதை காவலர் சிறையில் அடைப்பு

சென்னை: ஊதுபத்தி விற்பனை செய்து வந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை அடித்து உதைத்த போதை காவலரை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உயர் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். சென்னை தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் தினேஷ்குமார்(39). தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 15ம் தேதி இரவு குடிபோதையில் திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலை சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம், ஊதுபத்தி விற்கும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான திருச்சி கரியமங்கலத்தை சேர்ந்த விஜயகாந்த்(36), காரைக்கால் கண்ணாப்பூர் பகுதியை சேர்ந்த தினேஷ்(28) ஆகிய 2 பேரும் ஓபிஎம் தெரு எங்குள்ளது என கேட்டுள்ளனர்.

அதற்கு போதையில் சாதாரண உடையில் இருந்த காவலர் தினேஷ்குமார் ‘என்னிடமே வழி கேட்கிறாயா என கேட்டு அவர்கள் கையில் வைத்திருந்த ‘ஸ்டிக்கை’ பிடுங்கி உடைத்தும், அவர்களை அடித்தும் உள்ளார். வலி தங்க முடியாமல் உதவி கேட்டு அவர்கள் அலறினர். தடுக்க வந்த பொதுமக்களையும் அவர் தாக்க முயன்றார். பொதுமக்கள் அவரை பிடித்து சரமாரியாக உதைத்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பிறகு போலீசார் விசாரணை நடத்தினர். அதிகளவில் போதையில் இருந்ததால் போலீசாரையும் தரக்குறைவான வார்த்தைகளில் தினேஷ்குமார் பேசினார். தினேஷ்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உயரதிகாரிகள் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Tags : Heavy attack on transgender people who asked for directions
× RELATED லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது