×

திமுகவின் 15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வார்டு கிளை கழக தேர்தல்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுகவின் 15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு வார்டு கிளை கழகத்தேர்தல் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுகவின்  15வது பொதுத் தேர்தலில், 21 மாநகராட்சிகளில் உள்ள (சென்னை வடக்கு, சென்னை  வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு, சென்னை  தென்மேற்கு ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட) வட்டக் கிளைக் கழகத் தேர்தல்கள்,  கழக வார்டுகள் அடிப்படையில் நடைபெற உள்ளது.

சென்னை-300 வார்டுகள். ஆவடி-48,  தாம்பரம்-70, காஞ்சிபுரம்-51, வேலூர்-60, கடலூர்-45, தஞ்சாவூர்-51,  கும்பகோணம்-48, திருச்சி-93, கரூர்-48, சேலம்-60, ஓசூர்-45, கோவை-204,  திருப்பூர்-70, ஈரோடு-60, மதுரை-109, திண்டுக்கல்-48, சிவகாசி-48,  திருநெல்வேலி-55, தூத்துக்குடி-60, நாகர்கோவில்-52 வார்டுகள் அடிப்படையில்  நடைபெற உள்ளது. வட்ட திமுக உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஒரு அவைத் தலைவர், ஒரு  செயலாளர், துணைச் செயலாளர்கள் மூவர் (கட்டாயமாக ஒருவர் பொதுத்  தொகுதியினராகவும், ஒருவர் ஆதிதிராவிடர் வகுப்பினராகவும், ஒருவர்  மகளிராகவும் இருத்தல் வேண்டும்), ஒரு பொருளாளர் மற்றும் மேலமைப்பிற்கு  (பகுதிக் கழகத்திற்கு) ஐந்து பிரதிநிதிகளையும், 10 செயற்குழு  உறுப்பினர்களையும் ஆக 21 பேர் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த  பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர், அதற்குரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி  செய்து, அதற்குரிய கட்டணத்துடன், 29,30 மற்றும் மே- 1 ஆகிய தேதிகளில்,  அந்தந்தப் பகுதிக்குரிய வட்ட கழகங்களில் போட்டியிடுவோர், சென்னை  மாவட்டங்களைத் தவிர, ஏனைய மாவட்டங்களில், மாவட்டக் கழகம் அறிவிக்கும்  இடங்களில், வேட்புமனு விண்ணப்பத்தாள் ஒன்றுக்கு ரூ.25 வீதம் செலுத்தி  பெற்றுக் கொண்டு, பூர்த்தி செய்து, அவ்வேட்புமனுக்களை விண்ணப்பக்  கட்டணத்துடன், தலைமைக் கழக பிரதிநிதிகளிடம் தாக்கல் செய்து ரசீது பெற்றுக் கொள்ளவேண்டும்.

வட்டக்கிளையில்  அவைத்தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள் மூவர், பொருளாளர், மேலமைப்பு  பிரதிநிதிகள் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர் திமுகவிக் கடந்த 14வது  தேர்தலின்பொழுது உறுப்பினராக பதிவு செய்திருத்தல் வேண்டும் (14வது  தேர்தலின்பொழுது உறுப்பினராய் பதிவு செய்த உறுப்பினர் உரிமைச் சீட்டின்  நகல் (ஜெராக்ஸ்) வேட்புமனுவுடன் இணைக்க வேண்டும்).மேலும், அவர்கள் தற்போது  சம்பந்தப்பட்ட வட்டக்
கிளையின் உறுப்பினராய் இருத்தல் வேண்டும்.  

வட்டக்கிளையின் செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிடுவோர் சென்ற  14வது தேர்தலில் உறுப்பினராய் இருக்க வேண்டுமென்பதில்லை. நடைமுறை கால  உறுப்பினராக இருத்தல் வேண்டும். அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச்  செயலாளர்கள் மூன்று பேர் மேலமைப்பு பிரதிநிதிகள் ஐந்து பேர் ஆகிய  பொறுப்புக்கள். பொறுப்பு ஒன்றுக்கு ஒவ்வொரு வேட்புமனுக் கட்டணம் ரூ.500,  செயற்குழு உறுப்பினர் பொறுப்பு (10 பேர்) பொறுப்பு ஒன்றுக்கு வேட்புமனுக்  கட்டணம் ரூ.100, சென்னை மாவட்டங்களுக்குட்பட்ட வட்டங்களுக்கு வேட்புமனு  தாக்கல் செய்யும் இடம் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். வேட்புமனு  விண்ணப்பப் படிவம் ஒன்றுக்கு ரூ.25 கட்டணம் செலுத்தி தலைமைக் கழகத்தில்  பெற்றுக் கொள்ளலாம்.

* மாநகராட்சி வார்டு கழக தேர்தல் திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு:
திமுகவின் 15வது பொது தேர்தலில், மாநகராட்சிகளுக்குட்பட்ட வார்டுக் கழகத் தேர்தல், மே 1ம் தேதி நடத்தி முடிக்க வேண்டியிருப்பதால், தேர்தலில் கலந்து கொள்ள விருப்பமுடையவர்கள், மாவட்டக் கழகத்திலோ அல்லது பகுதிக் கழகத்திலோ வேட்புமனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதனை முறையாகப் பூர்த்தி செய்து, ஏப்ரல் 29ம் தேதி அன்று மாலைக்குள் தலைமைக் கழகப் பிரதிநிதிகளிடம் விண்ணப்பக் கட்டணத்துடன் வேட்பு மனுவினை தாக்கல் செய்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை, தலைமைக் கழகப் பிரதிநிதிகள் சரிபார்த்து, வேட்புமனு பரிசீலனை செய்து போட்டியிருக்கும் வார்டுக் கழகத் தேர்தலை மே 1ம் தேதிக்குள், தலைமைக் கழகப் பிரதிநிதிகள் தேதி, இடம் அறிவித்து நடத்திட நடவடிக்கை மேற்கொள்வர். இவ்வாறு தேர்தல் நடைபெறும் நாட்களில் பிரச்னைகள் ஏதுமின்றி சுமூகமாக தேர்தல் நடைபெற ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* திமுக உறுப்பினர் உரிமை சீட்டை உடனடியாக ஒப்படைக்க வேண்டும்; திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
உறுப்பினர் உரிமைச் சீட்டுக்களைத் தலைமைக் கழகப் பிரதிநிதிகள் வழங்கியபோது அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் இன்று வரை சம்பந்தப்பட்ட உரிய உறுப்பினரிடம் ஒப்படைக்காமல் இருந்தால், உடனடியாக இந்த அறிக்கை கண்ட ஒருவார காலத்திற்குள் அதனை ஒப்படைக்க வேண்டும். அப்படி எவரேனும் உறுப்பினர் உரிமைச் சீட்டுக்களை உரியவரிடம் வழங்கவில்லை என ஆதாரத்தோடு தலைமைக் கழகத்திற்குப் புகார் வருமேயானால், அவர்கள் நடைபெறவிருக்கின்ற திமுக அமைப்புத் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்களாவார்கள் என அறிவிப்பதோடு, அத்தகையோர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,15th General Election ,Thimuku ,General Cooler Thurimurugan , Ward Branch Elections in Tamil Nadu Ahead of DMK's 15th General Election: Announcement by General Secretary Duraimurugan
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...