×

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் கைவரிசை பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட ஈரான் கொள்ளையர்கள்: தீரன் படப்பாணியில் பிடித்து வந்தது தனிப்படை; சொகுசு கார், பைக், நகைகள் பறிமுதல்

சேலம்: சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட ஈரான் கொள்ளையர்கள் 2 பேரை, சேலம் மாநகர போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தீரன் படப்பாணியில், அவர்களை மடக்கி பிடித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் செவ்வாய்பேட்டை மூங்கப்பாடி தெருவை சேர்ந்தவர் பத்மாவதி (73). இவர், கடந்த மாதம் 10ம் தேதி, அங்குள்ள பஜனை மடத்தெருவில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த 2 வாலிபர்கள், பத்மாவதியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். புகாரின் பேரில், செவ்வாய்பேட்டை போலீசார், வழக்குப்பதிந்து, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல்கோடா தனிப்படை அமைத்தார். துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில் உதவி கமிஷனர் வெங்கடேசன் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.

அதில், சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில், இதே நபர்கள் பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. சொகுசு காரில் வந்து, அதனை நிறுத்தி விட்டு, ஒரு பைக்கை முதலில் திருடி, பிறகு நகைப்பறிப்பில் ஈடுபடும் கர்நாடகா மாநிலத்தில் தங்கியிருக்கும் ஈரான் கொள்ளையர்கள் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவர்களை கூண்டோடு கைது செய்ய, போலீசார், கர்நாடகா மாநிலத்தின் கடைசி பகுதியில் உள்ள பிதார் மாவட்டம், இராணிஹல்லி பகுதிக்கு சென்றனர். அங்கு, தீரன் அதிகாரம் ஒன்று படப்பாணியில், உள்ளூர் போலீஸ் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பத்ரோதின்காலனி என்னும் இடத்தில், 2 தலைமுறைக்கு முன் ஈரானில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வந்தவர்கள் குடும்பம், குடும்பமாக வசித்து வருகின்றனர். அவர்கள், திருட்டில் ஈடுபடுவதை தொழிலாக கொண்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்து, நகைப்பறிப்பில் தொடர்புடைய பிதார் மாவட்டம் ஜார்ஜின்ேசாலி பகுதியை சேர்ந்த  முகமத்ஆஷிப்அலி (23), பத்ரோதின்காலனியை சேர்ந்த ஷபி (எ) ஷபிஷேக் (30) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகைப்பறிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார், ஒரு பைக், 6 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இவர்கள், கடந்த 2 ஆண்டில் சேலம் மாநகரில் சூரமங்கலம், பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தனியாக நடந்து வரும் பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கைதான முகமதுஆஷிப்அலி, ஷபி ஆகியோருக்கு கும்பல் தலைவனாக சல்மான்கான் செயல்பட்டுள்ளார். இவர்களும், சபீர், அப்பாசி என 5 பேராக சேலத்திற்கு சொகுசு காரில் வந்து, பைக்குகளை திருடி நகைப்பறிப்பில் ஈடுபட்டு விட்டு தப்பியுள்ளனர். தற்போது 2 பேர் சிக்கியுள்ள நிலையில், கும்பல் தலைவன் சல்மான்கான் உள்ளிட்ட 3 பேரும் மும்பையில் பதுங்கியுள்ளனர். ஈரான் கொள்ளையர்களான இவர்கள், கும்பல் கும்பலாக தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வந்து திருட்டில் ஈடுபடுவதை தொழிலாக கொண்டுள்ளனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த பகாரியா கொள்ளை கும்பலை போல், இவர்களும் பெரிய நெட்ஒர்க் அமைத்து நகைப்பறிப்பு, கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை கூண்டோடு பிடித்து சிறையில் அடைக்க, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Tags : Salem ,Dharmapuri ,Krishnagiri ,Deeran , Iranian robbers tease handcuffed women in Salem, Dharmapuri, Krishnagiri: Deeran caught in the act personal; Seizure of luxury car, bike, jewelery
× RELATED அரசு அருங்காட்சியகத்தில் மாணவிகளுக்கு கல்வெட்டியல் பயிற்சி