சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்மந்தமும் இனி இல்லை: செல்லூர் ராஜூ அதிரடி

மதுரை:  மதுரை மாநகர் மாவட்ட அதிமுகவில் உள்ள 20 பகுதிக்கழக நிர்வாகிகள் மற்றும் பரவை பேரூராட்சி நிர்வாகிகளுக்கான அமைப்புரீதியான மூன்றாம் கட்ட தேர்தல், மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில்  நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலை வகித்திருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் ‘‘அழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தது வேதனையாக உள்ளது. சசிகலா குறித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறிவிட்டது. இதனால், அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் இனி எவ்வித சம்மந்தமும் இல்லை என முடிவாகி விட்டது. இனிமேல் அதிமுகவுடன் அவர்களை தொடர்புபடுத்தி பேசத் தேவையில்லை’’ என்றார்.

பேட்டியின் போது, செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தன் விரல் தன்னை குத்துவதுபோல், நிருபர்களாகிய நீங்கள் தேவையில்லாத கேள்வியை கேட்டு, என்னை சிக்கலில் மாட்டிவிடுகிறீர்கள். அதில் இருந்து மீள்வது பெரிய பிரச்னையாக உள்ளது. உங்கள் கேள்விக்கு பதில் கூறவேண்டும் எனக்கருதி ஏதாவது ஒரு கருத்தை நான் கூறினால், அதனை விவாதப் பொருளாக மாற்றி விடுகிறீர்கள். இனிமேல் அதனை திருத்திக்கொள்ளுங்கள் என அன்பாக கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

Related Stories: