கருட வாகனத்தில் காட்சி தந்தார் அழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்: விடிய விடிய தசாவதாரம்; நாளை அதிகாலை பூப்பல்லக்கு

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, மண்டூக முனிவருக்கு அழகர் சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மதுரை சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த 14ம் தேதி நடந்தது. இதையடுத்து, அழகர்கோவில் சித்திரை திருவிழா துவங்கியது. இத்திருவிழாவிற்காக அழகர்கோவில் மலையில் இருந்து அழகர் மதுரை வந்தார். மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. இதனையடுத்து, நேற்று முன்தினம் தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அன்றிரவு வண்டியூர் வீரராகவ பெருமாள்  கோயிலில் தங்கினார்.

நேற்று காலை வீரராகவ பெருமாள் கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அங்கிருந்து புறப்பட்டு, வண்டியூர் பகுதியில் உள்ள பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார். பின்னர் மதியம் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, 2 மணிக்கு கருட வாகனத்தில் அழகர் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார். முனிவர் சாப விமோசனம் பெற்றதை விளக்க, இரு நாரைகள் பறக்க விடப்பட்டன. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அழகர், அண்ணாநகர், ேக.கே.நகர், மதிச்சியம் வழியாக இரவு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு முத்தங்கி அவதாரம், மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் உள்ளிட்ட அவதாரங்களில் விடிய, விடிய அழகர் காட்சி தந்தார். அதிகாலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் பக்தி உலா நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தசாவதார காட்சிகளை கண்டு, அழகரை தரிசித்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று பகல் 12 மணியளவில், ராமராயர் மண்டபத்தில், அழகர் ராஜாங்க திருக்கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி, ஆழ்வார்புரம், கோரிப்பாளையம், தமுக்கம், வழியாக இரவு 12 மணி அளவில், தல்லாகுளம் பகுதியில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சணமாகி, நாளை அதிகாலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு செல்கிறார். அங்கிருந்து புறப்படும் அழகர், ரிசர்வ் லைன், புதூர், மூன்றுமாவடி, கடச்சனேந்தல், அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக செல்லும் போது, கிராமப்பகுதிகளில் விடிய, விடிய திருவிழா நடைபெறும். பக்தர்கள் அழகரை தரிசனம் செய்வார்கள். 20ம் தேதி காலையில் அழகர்கோவில் மலையை சென்றடைகிறார்.

Related Stories: