×

பஞ்சாப் கிங்சை எளிதாக வீழ்த்தியது: சன்ரைசர்சுக்கு தொடர்ச்சியாக 4வது வெற்றி; 4வது இடத்துக்கு முன்னேற்றம்

மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளிப் பட்டியலிலும் 4வது இடத்துக்கு முன்னேறியது. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். பயிற்சியின்போது அகர்வால் காலில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கேப்டனாக தவான் பொறுப்பேற்றார். தவான், பிரப்சிம்ரன் இணைந்து பஞ்சாப் இன்னிங்சை தொடங்கினர். தவான் 8 ரன் எடுத்து புவனேஷ்வர் வேகத்தில் மார்கோ யான்சென் வசம் பிடிபட்டார். பிரப்சிம்ரன் 14 ரன் எடுத்து நடராஜன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பூரன் வசம் கேட்ச் கொடுத்து வெளியேற, அதிரடி வீரர் பேர்ஸ்டோ 12 ரன் எடுத்து சுசித் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார்.

ஜிதேஷ் 11 ரன் எடுத்து உம்ரான் மாலிக் வேகத்தில் அவரிடமே பிடிபட பஞ்சாப் அணி 8 ஓவரில் 61 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், லிவிங்ஸ்டன் - ஷாருக் கான் ஜோடி 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 71 ரன் சேர்த்தது. ஷாருக் 26 ரன் (28 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி புவி வேகத்தில் வில்லியம்சனிடம் பிடிபட்டார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டன் 26 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். புவனேஷ்வர் வீசிய 19வது ஓவரின் கடைசி பந்தில் லிவிங்ஸ்டன் (60 ரன், 33 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்க, அப்போது பஞ்சாப் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்திருந்தது.

ஒரே ஓவரில் 4 விக்கெட்: உம்ரான் மாலிக் வீசிய கடைசி ஓவரின் 2வது பந்தில் ஓடியன் ஸ்மித் (13 ரன்) அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 4வது, 5வது மற்றும் 6வது பந்துகளில் ராகுல் சாஹர் (0, கிளீன் போல்டு), வைபவ் அரோரா (0, கிளீன் போல்டு), அர்ஷ்தீப் சிங் (0, ரன் அவுட்) அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர். அந்த ஓவரில் 1 ரன் கூட கிடைக்காத நிலையில் 4 விக்கெட்டை பறிகொடுத்த பஞ்சாப் அணி, 20 ஓவரில் 151 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரபாடா (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் உம்ரான் 4 ஓவரில் 1 மெய்டன் உள்பட 28 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றினார். புவனேஷ்வர் 3, நடராஜன், சுசித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 152 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் களமிறங்கியது. அபிஷேக், வில்லியம்சன் இருவரும் துரத்தலை தொடங்கினர். வில்லியம்சன் 3 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் தவான் வசம் பிடிபட்டார்.

அபிஷேக் - திரிபாதி இணைந்து 2வது விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். திரிபாதி 34 ரன் (22 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), அபிஷேக் 31 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ராகுல் சாஹர் பந்துவீச்சில் பெவிலியன் திரும்ப, பஞ்சாப் உற்சாகமானது. எனினும், மார்க்ரம் - பூரன் ஜோடி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த, சன்ரைசர்ஸ் 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்து வென்றது. மார்க்ரம் 41 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), பூரன் 35 ரன்னுடன் (30 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். உம்ரான் மாலிக் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்த சன்ரைசர்ஸ் 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது.

* புவி 150
ஐபிஎல் தொடரில் 150 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமை சன்ரைசர்ஸ் வேகம் புவனேஷ்வர் குமாருக்கு கிடைத்துள்ளது. முன்னதாக லசித் மலிங்கா (இலங்கை), டுவைன் பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்) இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தனர். ஸ்பின்னர்கள் ஹர்பஜன், பியுஷ் சாவ்லா, அமித் மிஷ்ரா, ஆர்.அஷ்வின் ஆகியோருடன் சேர்த்து ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக 7 வீரர்கள் 150 விக்கெட் மைல்கல்லை கடந்துள்ளனர்.

Tags : Punjab ,Kings ,Sunrisers , Punjab easily defeated Kings: 4th win in a row for Sunrisers; Progress to 4th place
× RELATED இதுபோல் ஆட்டத்தை தொடர விரும்புகிறேன்: ஆட்டநாயகன் நிதிஷ்குமார் பேட்டி