மாமல்லபுரத்துக்கு வந்து கொண்டு இருந்த மாநகர ஏசி பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு வந்து கொண்டு இருந்த மாநகர ஏசி பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாமல்லபுரம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சிற்பமும், பல்லவர் கால புராதன சின்னங்களும் தான். இந்த, சிற்பங்களை கண்டு ரசிக்க தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மாமல்லபுரத்துக்கு, சென்னை கோயம்பேடு, பாரிமுனை, தி.நகர் ஆகிய பகுதிகளில் இருந்து மாநகர போக்குவரத்து கழகம் மூலம் ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், மாநகர ஏசி பஸ்கள் போதிய பராமரிப்பு மற்றும் வருவாய் இல்லாததால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு எந்தவொரு முன் அறிவிப்புமின்றி திடீரென நிறுத்தப்பட்டன.

இதனால், கோடை கால பள்ளி, கல்லூரி விடுமுறையை கழிக்க மாமல்லபுரத்துக்கு குடும்பத்தோடு வரும் சுற்றுலா பயணிகள் ஏசி பஸ்கள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதேபோல், கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமானால் ஏசி பஸ்களில் செல்லலாம் என்று நினைக்கும் பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிகிறது. கத்திரி வெயில், துவங்கு வதற்கு முன்பே மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் வெயில் கடுமையாக வாட்டி வதைக்கிறது.

இது சம்பந்தமாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இது வரை, ஏசி பஸ் இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. எனவே, சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ஒரு ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்ட ஏசி பஸ்களை மீண்டும் இயக்க போக்குவரத்துத் துறை அமைச்சர், மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: