வெங்கடாபுரம் கிராமத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவுநாள் அனுசரிப்பு: மணிமண்டபம் கட்டித்தர கோரிக்கை

திருத்தணி: வெங்கடாபுரத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் 47ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அவருக்கு நினைவு மண்டபம் கட்டவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். திருத்தணி அருகே வெங்கடாபுரம் கிராமத்தில் பிறந்து அபார கற்றல் திறன் மூலம் உலகம் முழுவதும் போற்றப்பட்ட டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். இவர், நாட்டின் 2வது குடியரசு தலைவராக இருந்தார். ஆசிரியர் பணியில் மிகவும் ஆர்வம் உடையவர். டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதேபோல், ஏப்ரல் 17ம் தேதி அவரது நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அவரது சொந்த கிராமமான வெங்கடாபுரத்தில் நேற்று அவருக்கு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அதன்படி கிராம பொதுமக்கள் சார்பில் ராதாகிருஷ்ணன் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் டாக்டர் ராதாகிருஷ்ணனின் புகழை நினைவு கூர்ந்தனர். குறிப்பாக வெங்கடாபுரத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு மணிமண்டபம் கட்டவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: