அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை: பயணிகளிடம்  அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களுக்கு அதிகாரிகள் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி உள்ளிட்ட பண்டிகைகளுக்காக 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வந்தது. இதனைத்தொடர்ந்து சென்னையில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில், ஒரு சில ஆம்னி பேருந்துகள் இதை பயன்படுத்தி வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து முறைகேடுகளில் ஈடுபட்டது. இதனை தடுக்க தமிழ்நாடு போக்குவரத்து துறை தமிழகம் முழுவதும் சிறப்பு தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டது.

அதன்படி சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மோகன், பன்னீர் செல்வம், லீலாவதி ஆகியோர் நேற்று முன்தினம் கோயம்பேட்டில் சுமார் 110 ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து 12 தணிக்கை அறிக்கை வழங்கினர். அப்போது ரூ.15 ஆயிரம் இணக்க கட்டணம் வசூலித்தனர். மேலும் சாலை வரி கட்டாத ஒரு வாகனத்தை சிறை பிடித்து அதற்கு ரூ.90 ஆயிரம் வரி வசூல் நிர்ணயம் செய்தும் நடவடிக்கை எடுத்தனர்.

Related Stories: