திருவண்ணாமலையில் விடிய விடிய கிரிவலம்: சித்ரா பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்காததால் பக்தர்கள் அவதி

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தநேரம் நேற்று அதிகாலை 2.23 முதல் இன்று அதிகாலை 1.17 மணிக்கு நிறைவு பெற்றது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். தொடர்ந்து நேற்று மாலை பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. தொடர்ந்து இரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து 2வது நாளான இன்றும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இதில் நள்ளிரவில் திடீரென பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றதாக கூறப்படுகிறது. சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு நேற்று காலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. கிரிவலம் முடிந்து ஊருக்கு திரும்பிய பக்தர்கள் சுமார் 4 மைல் தூரம் நடந்து சென்று தற்காலிக பஸ் நிலையங்களுக்கு வந்து பஸ்களில் ஏறிச்சென்றனர். ஆனால் இன்று அதிகாலை முதல் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் கிரிவலம் முடிந்து ஊருக்கு திரும்பிய பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

இதற்கிடையில் சித்ரா பவுர்ணமியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிரிவலம் சென்ற பக்தர்கள் ரயில்களில் தங்களது ஊர்களுக்கு செல்லமுடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். ரயில் நிலையத்தில் அதிகளவு பக்தர்கள் நள்ளிரவு முதல் விடிய விடிய காத்திருந்தனர். நேரம் செல்ல செல்ல ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அப்போது அவ்வழியாக வழக்கமாக சென்ற ஒரு சில ரயில்களில் முண்டியடித்து ஏறினர். இதனால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். விடுமுறை தினம் என்பதால் இன்றும் கோயிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Related Stories: