×

கடலூர்- விருத்தாசலம்- சேலம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றம்: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்புதல்

குறிஞ்சிப்பாடி: கடலூர் பச்சையாங்குப்பம் முதல் சின்னசேலம் கூட்ரோடு வரையிலான சி.வி.எஸ் எனப்படும் கடலூர்- விருத்தாசலம்- சேலம் (சின்னசேலம் கூட்ரோடு) 532 தேசிய நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தால் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொண்ட ஆய்வில் கடலூர் முதல் சின்னசேலம் கூட்்ரோடு வரை அன்னவெளி, வன்னியர் பாளையம், பெரிய காட்டுசாகை, சுப்பிரமணியபுரம், குள்ளஞ்சாவடி, தோப்புக்கொல்லை, த. பாளையம், ஊமங்கலம், விருத்தாசலம் புறவழிச்சாலை சந்திப்பு(விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையம்), பரவலூர் விளாங்காட்டூர் உள்ளிட்ட 14 இடங்கள் விபத்துகள் அடிக்கடி நடக்கும் இடங்களாக (பிளாக் ஸ்பாட்) கண்டறியப்பட்டன.

இதில், கடந்தாண்டு குள்ளஞ்சாவடி சந்திப்பில் 3 கோடி ரூபாய் செலவில் வடிகால் அமைத்து, சென்டர் மீடியன் வசதியுடன் நான்கு வழிச்சாலையாக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.  அதேபோல், நடப்பாண்டில் சுப்பிரமணியபுரம், தோப்புக்கொல்லை, த. பாளையம், அன்னவெளி, பெரிய காட்டுசாகை, வன்னியர் பாளையம், கருமாட்சி பாளையம் ஆகிய இடங்களில் சாலை விரிவாக்கம், சென்டர் மீடியன், வடிகால் வசதிகளுடன் கூடிய மேம்பாட்டுப் பணிகள் மற்றும் வடலூர் வள்ளலார் பள்ளி எதிரில்  பள்ளி மாணவர்களுக்காக நடைபாதை மேம்பாலம், சென்டர் மீடியன், வடிகால் வசதியுடன் கூடிய மேம்பாட்டுப் பணிகள் என 25 கோடியே 80 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

குறிஞ்சிப்பாடி ரயில் நிலையம் அருகே புறவழிச்சாலை சந்திப்பில் 24 கோடி ரூபாய் மதிப்பில் சர்வீஸ் சாலையுடன் பாலம் கட்டும் பணிக்காக ஃபர்ஸ்ட் பைல் லோடு டெஸ்ட் முடிந்து, பணிகள் துவங்கப்பட உள்ளன. இந்நிலையில், பணிகள் முடிந்துள்ள மற்றும் நடந்து வரும் 14 ஹாட்ஸ்பாட் இடங்களை தவிர்த்த, மீதமுள்ள 42 கிலோ மீட்டர் தூரத்தை 257 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்ற இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

குறிஞ்சிப்பாடியில் இரட்டை மேம்பாலம்
கடலூர்- விருத்தாசலம்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குறிஞ்சிப்பாடி ரயில்வே சந்திப்பு அருகே 24 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட பர்ஸ்ட் பைல் லோடு டெஸ்ட் முடிந்துள்ள நிலையில், நான்குவழிச் சாலைக்காக திட்ட அனுமதி கிடைத்துள்ளது. இதனால், இந்த இடத்தில் மேலும் ஒரு பாலம் கட்டுவதற்காக தேசிய நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

1200 மரங்களை வெட்ட அனுமதி
கடலூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நான்குவழிச்சாலை பணிக்காக 1200 மரங்களை வெட்ட பசுமைத்தீர்ப்பாயத்திடம் தேசிய நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்றுள்ளது. இதற்கு பதிலாக 1க்கு 10 என்ற விகிதத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் சாலையோரம் உள்ள மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags : Cadalore ,Varthasalam ,Salem ,National Highways Commission , National Highway, National Highways Authority, approved
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...