கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா: பல்லாயிரம் பக்தர்கள் குவிந்தனர்

கூடலூர்: கண்ணகி கோயிலில் நேற்று நடந்த முப்பெரும் விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தேனி மாவட்டம், கூடலூர் அருகே வண்ணாத்திபாறை மங்கலதேவி மலையில், தமிழக-கேரள எல்லையில், கண்ணகி கோயில் உள்ளது. இங்கு சித்திரை முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகி விழா, பூமாரி விழா என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி குமுளியிலிருந்து கொக்கரக்கண்டம் வழியாக ஜீப்பிலும், கூடலூரிலிருந்து பளியன்குடி வழியாகவும் பக்தர்கள் நடந்தும் கண்ணகி கோயிலுக்குச் சென்றனர்.

கம்பத்திலிருந்து கூடலூர் வழியாக பளியன்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பளியன்குடியிலிருந்து தமிழக வனப்பாதை வழியாக நடந்து சென்ற பக்தர்களுக்கு கூடலூர் நகராட்சி சார்பில் தற்காலிக ஓய்வறை, குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கேரள போலீசார் கெடுபிடி:

குமுளியிலிருந்து கண்ணகி கோயிலுக்கு சென்ற பக்தர்களிடம் கேரள போலீசார் மற்றும் வனத்துறையினர் கெடுபிடி காட்டினர். கொக்கரக்கண்டத்தில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தபின் பக்தர்களை கோயிலுக்கு அனுப்பினர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணகி கோயிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். கோயிலில் அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை பள்ளி உணர்த்தல், மலர் வழிபாடு, யாக பூஜை, மங்கல இசை, பொங்கல் வைத்தல், பிரசாதம் வழங்குதல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றன. காலை 10 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல், அம்மனுக்கு பூஜித்த மங்கல நாண், வளையல்களை பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை மணிமேகலையின் அமுதசுரபியில் உணவு வழங்கும் நிகழ்ச்சியும், அவல் சிறப்புணா வழங்கல், திருவிளக்கு வழிபாடு, பூமாரி விழாவோடு சித்திரை முழு நிலவு விழா நிறைவு பெற்றது. கண்ணகி கோயில் அறக்கட்டளை சார்பில், பக்தர்களுக்கு கோயில் வளாகத்திலும், பளியங்குடியிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் வளாகத்தில் இருமாநில போலீஸ், மருத்துவத்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்துறை இணைந்து செயல்பட்டனர்.

Related Stories: