நரிக்குடி அருகே சங்க கால உறைகிணறு கண்டுபிடிப்பு

காரியாபட்டி: நரிக்குடி அருகே கிருதுமால் நதி ஆற்றங்கரையில் சங்க கால உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி, மறையூர் அருகே உள்ள கிருதுமால் நதியின் கிழக்கு கரை மேற்பரப்பை, பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் தாமரைக்கண்ணன், மீனாட்சிசுந்தரம் மற்றும் தர் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, சங்க காலத்து வடிகுழாயுடன் கூடிய உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது.

வரலாற்று ஆர்வலர்கள் கூறியதாவது :

பழங்காலத்தில் மக்கள் ஆற்றங்கரை பகுதிகளில் அதிகமாக குடியேறினர். விவசாயம், கால்நடைகள் வளர்ப்புக்கான தண்ணீரை ஆறுகளில்தான் எடுத்துள்ளனர். அதுபோல், ஆற்றில் வரும் நீரை நேரடியாக குடிநீராக பயன்படுத்த முடியாது. எனவே, உறைகிணறு அமைத்து அதற்கு நீர் கொண்டு வர வடிகுழாயும் பயன்படுத்தினர். இங்கு கண்டறிந்த உறைகிணறானது மிகவும் தொன்மையானது. கிருதுமால் நதி கரையில் ஏற்பட்ட மண் அரிப்பினால் தெளிவாக வெளியே தெரிகிறது. அதனருகில் ஏராளமான கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், அதன் விளிம்பு பகுதிகளும் பரவிக் கிடக்கின்றன. இங்குள்ள உறை கிணற்றின் உயரம் ஒன்றரை அடியும், அதன் தடிமன் 2 இன்ச் அளவிலும் உள்ளது.

மேலும், மேற்பகுதி குவிந்தும், கீழ்ப்பகுதி சற்றே விரிந்தும் உள்ளது. தற்போது 6 உறைகள் வெளியில் தெரிகின்றன. இந்த உறை கிணற்றிற்கு நீர் சேமிக்கும் விதமாக 10 நீர் வடிகுழாய் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை பார்க்கும்போது, சங்க கால மக்கள் தற்போதைய நரிக்குடி அருகே கிருதுமால் ஆற்றங்கரையில் ஒரு நாகரிக வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. அரசு முறையான அகழாய்வு மேற்கொண்டால், பல புதிய தடயங்களை வெளிக்கொண்டு வர முடியும். இவ்வாறு கூறினர்.

Related Stories: