அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டி பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்றதை விசாரிக்க குழு அமைப்பு: ஈரோடு எஸ்பி தகவல்

ஈரோடு: ஈரோட்டில் அதிகாரிகள் மீது பெண் இன்ஸ்பெக்டர் குற்றம் சாட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக டவுன் டிஎஸ்பி தலைமையில் விசாரணை குழு அமைத்துள்ளதாக எஸ்பி தெரிவித்தார்.ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் நீலாவதி கடந்த 13ம் தேதி பணியில் இருந்து பாதியிலேயே வீட்டிற்கு சென்றார். முன்னதாக அவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக செல்போனில் இருந்து உயர் அதிகாரிகளுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு சென்றார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் நீலாவதிக்கு மருத்துவர்கள் வழங்கியிருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிட்டு, தோழி வீட்டிற்கு சென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.

இச்சம்பவம் குறித்து நீலாவதி கூறுகையில், எனது தற்கொலை முயற்சிக்கு ஏடிஎஸ்பி கனகேஸ்வரி, தனிப்பிரிவு ஏட்டு பாபு ஆகியோரும், ஈரோடு எஸ்பி வாக்கி டாக்கியில் கடுமையாக திட்டியதுமே காரணம் என கூறினார். இத்தகவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஈரோடு எஸ்பி சசி மோகன் கூறியதாவது:இன்ஸ்பெக்டர் நீலாவதி மீது ஏற்கனவே சில குற்றச்சாட்டுகள் உள்ளன. தற்போது அவர் பல்வேறு இடங்களில் போலீஸ் அதிகாரி உட்பட சிலர் மீது குற்றச்சாட்டு வைத்து பேசி உள்ளார்.

அது தொடர்பாக என்னிடம் நேரடியாக புகார் வரவில்லை. இருப்பினும், அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளதால், அதன் மீது விசாரணை நடத்த டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  இக்குழுவின் அறிக்கை காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். அதன் முடிவில் உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல் மற்றும் உத்தரவின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: