×

மாநில பட்டியலில் தான் கல்வி, சுகாதாரம் இருக்க வேண்டும்: மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் எம்பி பேச்சு

சென்னை: கல்வி மத்திய பட்டியலில் இருப்பதால்தான் நீட் போன்ற தேர்வுகள் இருக்கிறது. கல்வி, சுகாதாரம் ஆகியவை மாநில பட்டியலில்தான் இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான கபில்சிபல் தெரிவித்துள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ மகன் ராகேஷ் நினைவாக, நீதி மற்றும் சமத்துவத்திற்கான அறக்கட்டளை தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ராகேஷின்  உருவப்படத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான கபில்சிபல், ப.சிதம்பரம், இந்து என்.ராம், சென்னை உயர் நீதிமன்ற தற்போதைய நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாராதி, நாடளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், அரசு வழக்கறிஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்.  

நிகழ்ச்சியில் கபில்சிபல் பேசியதாவது: பாராளுமன்றத்தில் உங்களுடைய கருத்தை நீங்கள் சுதந்திரமாக கூற முடியாது. மசோதாவிற்கு எந்த மாதிரியான வாக்கை அளிக்க வேண்டும் என்று ஆளுகின்ற அரசுதான் முடிவு செய்கிறது.  அரசியல் சட்டங்கள் அங்கு செல்லுபடியாகாது.  மெஜாரிட்டி அரசு தாங்கள் மெஜாரிட்டியாக இருக்கிறோம் என்ற காரணத்தால் அவர்களுக்கு தேவையான சட்டங்களை பாராளுமன்றத்தில் எளிதாக சட்டமாக்கி வருகின்றனர். கார்பரேட் நிறுவனங்கள்தான் கட்சிகளுக்கு நிதியை வழங்குகின்றன.
 இதுபோன்ற கட்சிகளிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்? நாட்டில் ஏழைகள், ஏழைகளாகவே இருக்கின்றனர். பணக்காரர்கள் மேலும் பணக்காரராக மாறுகின்றனர். மக்களின் அடிப்படை உரிமைகளை மீறக்கூடிய வகையில் எந்த சட்டமும் இருக்க கூடாது.   உதாரணமாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நிதி அமைச்சரிடம் கூட ஆலோசிக்கவில்லை. நடைபெறும் தேர்தல்களில் ஏதேனும் ஒரு கட்சி வெற்றிபெற்றதாக அறிவிப்பதே ஐனநாயகம் என கருத்தப்படுகிறது.

 நாட்டில் 24 சதவீத  பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி உள்ளது. இந்த சூழலில்தான்  டிஜிட்டல் இந்தியா குறித்து பேசுகின்றனர். நாட்டில் சமூக அநீதி, அரசியல் அநீதி, பொருளாதார அநீதிகள் மட்டுமே நிகழ்கின்றது. பாஜ அரசு பொறுப்பேற்றதில் இருந்து 25 சதவீத  குற்றச்செயல்கள் அதிகரித்திருக்கிறது. இதில் 61 சதவீதம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது. பாஜ அரசின் அதிகார வரம்புகளை எதிர்ப்பதில் திமுகதான் முன்மாதிரியாக உள்ளது. கூட்டாட்சி தத்துவததிற்கு எதிராக நடத்தப்படும் செயல்களை தட்டி கேட்கும்  மாநில அரசுகள் நசுக்கப்படுகின்றன. மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிகள் முறையாக வழங்கப்படுவதில்லை.  ஊடகங்கள் தற்போது கைப்பற்றப்பட்டு  மோசமான சூழ்நிலை உருவாகி உள்ளது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக, நியாயமான தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் தற்போது அப்படி நடைபெறவில்லை.

இவ்வாறு  கபில் சிபல் பேசினார். இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த கபில்சிபல், கல்வி மத்திய பட்டியலில் இருக்கிறது. அதனால்தான் நீட் போன்ற தேர்வுகள் இருக்கிறது.  கல்வி, சுகாதாரம் மாநில பட்டியலில் இருக்க வேண்டும். ஆளுநர் குறைந்த அதிகாரம் கொண்டவர். அவருக்கான அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறது. அதேபோல் மாநில அரசின் சட்ட மசோதாவை ரத்து செய்ய அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. பல மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா.  ஒன்றிய அரசு என அழைப்பதே சரி என்று கூறினார்.

அறக்கட்டளையை முதல்வர் தொடங்கி வைத்தார்
திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ மகன் ராகேஷ் கடந்த மாதம் ஈசிஆர் சாலையில் நடந்த வாகன விபத்தில் பலியானார். இதையடுத்து, ராகேஷ் நினைவாக, நீதி மற்றும் சமத்துவத்திற்கான அறக்கட்டளையை என்.ஆர்.இளங்கோ தொடங்கினார். இந்த அறக்கட்டளை மூலம் சட்டம் பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின்  தொடக்க நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.

இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மறைந்த ராகேஷின்  உருவப்படத்தை  திறந்துவைத்து மலர்தூவி மரியாதை செய்தார். அதன் பிறகு நீதி மற்றும் சமூக சமத்துவத்திற்கான அறக்கட்டளையை முதல்வர் தொடங்கி வைத்தார். இதையடுத்து, ராகேஷ் நினைவு சொற்பொழிவு நடந்தது. நிகழ்ச்சியில் சட்ட வல்லுநர்கள், சட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Senior ,Kapil Sibal , That's on the state list Education and health should be: Senior Advocate Kapil Sibal MP Speech
× RELATED சொல்லிட்டாங்க…