சதம் விளாசினார் லக்னோ கேப்டன் ராகுல் மும்பை இந்தியன்சுக்கு தொடர்ச்சியாக 6வது தோல்வி

மும்பை: ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சீசனில் தொடர்ச்சியாக அரை டஜன் தோல்விகளைப் பதிவு செய்து பரிதாபமான நிலையை எட்டியுள்ளது.பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டியில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடன் மோதிய மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீசியது. கேப்டன் கே.எல்.ராகுல், டி காக் இருவரும் லக்னோ இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவரில் 52 ரன் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது. டி காக் 24 ரன் (13 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வெளியேறினார்.

அடுத்து ராகுல் - மணிஷ் பாண்டே இணைந்து 2வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தனர். மணிஷ் 38 ரன் (29 பந்து, 6 பவுண்டரி), ஸ்டாய்னிஸ் 10, தீபக் ஹூடா 15 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அபாரமாக விளையாடிய கே.எல்.ராகுல். ஐபிஎல் தொடரில் தனது 3வது சதத்தை நிறைவு செய்தார். நேற்று தனது 100வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய அவர் சதமடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது. லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன் குவித்தது.

ராகுல் 103 ரன் (60 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்), க்ருணல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை தரப்பில் உனத்கட் 2, எம்.அஷ்வின், ஆலன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்து தொடர்ச்சியாக 6வது தோல்வியை சந்தித்தது. சூரியகுமார் 37, டிவால்ட் 31, திலக் 26, போலார்டு 25, உனத்கர் 14 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். லக்னோ பந்துவீச்சில் ஆவேஷ் 3, ஹோல்டர், சமீரா, பிஷ்னோய், ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.5 முறை சாம்பியனான மும்பை அணி, இம்முறை புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு பரிதாபமான நிலையில் உள்ளது.

Related Stories: