ஐய்ய்யா சாமி... போடுங்க சாமி...: நிதி கேட்கிறார் இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில்  இம்ரான் கான் அரசு நம்பிகையில்லா தீர் மானத்தில் தோல்வி அடைந்ததால்  அரசு கவிழ்ந்ததை அடுத்து, புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார். இந்நிலையில், புதிய சபாநாயகராக ராஜா பர்வேஸ் அஸ்ரப் நேற்று தேர்வு செய்யப்பட்டார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி முதல் 2013 மார்ச் 16ம் தேதி வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார்.இந்நிலையில், ஷெபாஸ் அரசுக்கு எதிராக இம்ரான் கான் போராட்டங்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில்,  டிவிட்டரில் நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘வெளிநாட்டு சதியால் பாகிஸ்தானில் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஊழல் அரசு திணிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட  இந்த அரசை அகற்றுவதற்காக நடத்தப்படும் போராட்டத்துக்காக வெளிநாட்டில் வாழும் பாகிஸ்தானியர்கள் தாராளமாக நிதி உதவி வழங்க வேண்டும்,’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சபாநாயகருக்கு அடி பாகிஸ்தானில் இம்ரான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, பஞ்சாப் மாகாணத்தின் முதல்வரும் பதவி விலகினார். இங்கு புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று சட்டப்பேரவை கூட்டம் நடந்தது. இதற்காக, துணை சபாநாயகர் தோஸ்த் முகமது மஜாரி அவைக்கு வந்தார். அப்போது,  இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சி உறுப்பினர்கள்  அவரை சூழ்ந்து கொண்டு தாக்கினர். அவரை அவை காவலர்கள் காப்பாற்றினர். பஞ்சாப் மாகாண முதல்வர் பதவிக்கு ஷெபாஸ் ஷெரீப் மகன் ஹம்சா, எதிர்க்கட்சி வேட்பாளர் பர்வேஸ் இலாஹி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Related Stories: