×

ஒரே நேரத்தில் உக்ரைனின் 8 நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல்

* எண்ணெய் ஆலை வெடித்து சிதறியது * இருதரப்பிலும் சுமார் 5,000 வீரர்கள், மக்கள் சிறைபிடிப்பு

கீவ்: உக்ரைன்-ரஷ்யா போர் தற்போது மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. கருங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் மிகப்பெரிய போர் கப்பல் மீது தாக்குதல், எல்லைக்குள் புகுந்து குடியிருப்புகள் மீது உக்ரைன் ராணுவம் குண்டு மழை பொழிந்ததால், ஆத்திரமடைந்த ரஷ்யா  கீவ் மற்றும் 8 நகரங்களில் அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது.  கிழக்குப் பகுதியில் உள்ள டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷ்ய படைகள் தாக்குதல் தீவிரமடைவதால், தலைநகரை விட்டு வெளியேறியவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக இப்போது திரும்ப வேண்டாம் என்று மேயர் எச்சரித்து உள்ளார்.

கிரோவோஹ்ராட் பிராந்தியத்தில் உள்ள ஒலெக்சாந்திரியாவில் உள்ள விமானநிலையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் நடந்த குண்டு வீச்சில் ஒருவர் கொல்லப்பட்டார்.குண்டு வீச்சால் செவரோடோனெட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் நகரங்களில் எரிவாயு குழாய்களும் சேதமடைந்தன. மரியுபோலில் தொடர் சண்டை நடந்து வருகிறது. கார்கிவ்வில், குடியிருப்பு பகுதி மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் 7 மாத குழந்தை உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.34 பேர் காயமடைந்ததனர்.

ரஷ்யா ராணுவ வெளியேறிய கீவ்வில் சுமார் 900 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மரியுபோலிலும் பொதுமக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட சடலங்களை ரஷ்ய ராணுவம் தோண்டி எடுப்பதை மக்கள் பார்த்துள்ளனர். ரஷ்யா நேற்றும் மட்டும் கிழக்கு உக்ரைனில் உள்ள டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கார்கிவ், மத்திய உக்ரைனில்  டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், பொல்டாவா, கிரோவோஹ்ராட் மற்றும் தெற்கில்  மைக்கோலைவ், கெர்சன் ஆகிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் குண்டு பொழிந்தது. லிசிசான்ஸ்க் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலை வெடித்து சிதறி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  ரஷ்யாவின்கார்கிவ் மற்றும் புறநகர் பகுதியில் 11 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தெற்கு மைக்கோலைவ்வில் வான்வழித் தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.

உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறுகையில், 700 உக்ரைன் வீரர்கள், 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், 500க்கும் மேற்பட்ட பெண்கள் ரஷ்யர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் அதே எண்ணிக்கையிலான ரஷ்ய வீரர்களை சிறைபிடித்து வைத்திருப்பதால், ‘எந்தவித நிபந்தனையுமின்றி’ பொதுமக்களை விடுவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதால், சிறைபிடிக்கப்பட்ட வீரர்களை மாற்றிக் கொள்ள உக்ரைன் முடிவு செய்துள்ளது’ என்றார்.

பிரிட்டன் பிரதமர் உட்பட 13 பேருக்கு ரஷ்யா தடை
உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் கடுமையாக பொருளாதார தடைகளை விதித்துள்ளது. உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளையும் அளித்து வருகின்றன.  இதனால் கோபமடைந்துள்ள ரஷ்யா, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், துணை பிரதமர் டொமினிக் ராப், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிதியமைச்சர் ரிஷி சுனாக் உட்பட 13 பேர் தனது நாட்டுக்குள் நுழைய நேற்று தடை விதித்தது.

உக்ரைன் பிரதமர் அமெரிக்கா பயணம்  
வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி அடுத்த வாரம் நடத்தும் வசந்தகால கூட்டத்தில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால், நிதி அமைச்சர் செர்ஹி மார்சென்கோ மற்றும் மத்திய வங்கியின் கவர்னர் கிரிலோ ஷெவ்செங்கோ ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில் ரஷ்யா படையெடுப்பால், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து விவாதிக்கப்படுகிறது.



Tags : Ukraine , Simultaneously in Ukraine Russia attacks 8 cities
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...