திருத்தணி முருகன் மலைக் கோயிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்: 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் நேற்று விடுமுறை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்  திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். நேற்று, புனிதவெள்ளியை முன்னிட்டு அரசு விடுமுறை  மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால் திருத்தணி மலைக்கோயிலில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். வாகனங்களிலும் நடைபயணமாகவும் ஏராளமான பக்தர்கள், மலைக்கோயிலில் திரண்டனர்.

வழக்கத்தைவிட அதிகளவில் பக்தர்கள் கூட்டம் இருந்ததால் பொது தரிசன வழியில் சுமார் 2 மணி காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மேலும், ரூ.25, 100 மற்றும் 150 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து முருகரை வழிபட்டனர். நேற்று அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தினர். இதன்பின்னர் நேற்றிரவு உற்சவர் தங்கத் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள், ‘’கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா’ என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர். பக்தர்களின் வசதிக்காக திருத்தணி ஏ.எஸ்.பி., சாய்பரணீத் உத்தரவின்படி, 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: