சென்னை கம்பெனியில் உணவு சாப்பிட்ட 20 பெண் தொழிலாளருக்கு வாந்தி, மயக்கம்

செய்யாறு: சென்னை ஒரகடம் தனியார் கம்பெனியில் மதிய உணவு சாப்பிட்ட செய்யாறு, வந்தவாசியை சேர்ந்த 20 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சென்னை ஒரகடம் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, சேத்துப்பட்டு, வந்தவாசி பகுதிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முதல் ஷிப்டான காலை 6 முதல் மதியம் 2 மணி வரை பணியில் ஈடுபட்டவர்கள் அங்குள்ள கேண்டீனில் மதிய உணவு சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் தேசூர், வந்தவாசி, செய்யாறு ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 பெண் தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் சிங்கப்பெருமாள் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மீண்டும் கம்பெனிக்கு சென்று வேலை முடிந்து மாலை 4.30 மணியளவில் கம்பெனி பஸ்சில் செய்யாறுக்கு சென்றனர். அப்போது விஜயலட்சுமி(22), தேசூர் ஈஸ்வரி(28), திலகவதி(21), சரண்யா(22), அர்ச்சனா(19), பவுனு(21), வந்தவாசி கலையரசி(30) ஆகிய 7 பேர் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக செய்யாறு அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். உணவு ஒவ்வாமையால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: