புதுச்சேரி சட்டப்பேரவை செயலகத்துக்கு நிதி அதிகாரம்: அரசாணை வெளியிடப்பட்டது

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை செயலருக்கு நிதி அதிகாரங்களை பயன்படுத்துவதற்கான ஆணையை கடந்த 1981ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியிருந்தது. ஆனால் இந்த ஆணை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு முன் இருந்த சபாநாயகர்கள் ராமச்சந்திரன், கண்ணன் ஆகியோர் இதற்கான முயற்சியை எடுத்தனர். ஆனாலும் நிறைவேறவில்லை. இது சபாநாயகர் செல்வம் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. தலைமை செயலர், நிதி செயலர், சட்டத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சட்டசபை செயலகத்துக்கு நிதி அதிகாரம் வழங்குவதற்காக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் ஒப்புதல் பெறப்பட்டு, இதற்கான அரசாணை கடந்த 13ம் தேதி புதுச்சேரியில் வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் அரசு துறை தலைவர் போன்று, சட்டப்பேரவை செயலரும் நிதி அதிகாரங்களை பயன்படுத்த முடியும். மேலும் சட்டப்பேரவை செயலகத்தின் நிதி தொடர்பான கோப்புகளை தலைமை செயலர், நிதி செயலர் ஆகியோருக்கு அனுப்ப தேவையில்லை. நிதியை பயன்படுத்தும் அதிகாரம் சட்டபேரவை செயலருக்கு வழங்கப்படும். இதனால் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படும். 41 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை செயலகத்துக்கான நிதி அதிகாரத்தினை பல்வேறு முயற்சிகளுக்கு பின் சபாநாயகர் செல்வம் அமல்படுத்தியுள்ளார்.

Related Stories: