வல்லத்தில் வளமாக செயல்படும் வளம்மீட்பு பூங்கா: மக்கள் பாராட்டு குவிகிறது

வல்லம் : தஞ்சை அருகே வல்லத்தில் வளமாக செயல்பட்டு வரும் ”வளம் மீட்பு பூங்கா” அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. தஞ்சை அருகே வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. மிக முக்கியமான பகுதியாக வல்லம் உள்ளது. இப்பகுதியை சுற்றி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என நிறைந்து உள்ளன.

எப்போதும் போக்குவரத்து நிறைந்த இந்த இப்பேரூராட்சியில் 4743 குடியிருப்பு வீடுகளும் 480 வணிக கட்டிடங்களும் உள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் வார்டு 12ல் அமைந்துள்ள அய்யனார் நகர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.இங்கு அமைந்துள்ளதுதான் வளம் மீட்பு பூங்கா. 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளம் மீட்பு பூங்கா கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சித்துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்த போது அமைக்கப்பட்டது.

சிறந்த செயல்பாட்டால் விருதும் பெற்றது.அன்றிலிருந்து இன்று வரை குப்பைகள் சேகரிக்கும் கிடங்கு என்று யார் இதை கூறினாலும் நம்ப முடியாத அளவிற்கு அருமையான செயல்பாட்டை கொண்டு விளங்கி வருகிறது. அதிலும் கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் சிறப்பான செயல்பாடுகளால் மாவட்ட அளவில் மட்டுமின்றி மாநில அளவில் வல்லம் பேரூராட்சி வள மீட்பு பூங்கா முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.

இங்கு தினசரி சேகரமாகும் குப்பையின் அளவு 4.23 டன், அதில் 2.54 டன் மக்கும் குப்பையும் 1.04 டன் மக்காத குப்பையும் 0.65 டன் வடிகால் மண் சேகரம் செய்யப்படுகிறது. தூய்மை பணியாளர்கள் மற்றும் சுயஉதவிக்குழுக்கள் மூலம் தினமும் சேகரிக்கப்படும் மக்கும் திடக்கழிவுகளை உரப்படுக்கை அமைக்கப்பட்டு அதில் EM Solution தெளிக்கப்பட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை உரப்படுக்கை மாற்றி அமைக்கப்படுகிறது இதே போல் மூன்று முறை மாற்றி அமைக்கப்பட்டு 45 நாட்கள் பிறகு முக்கிய திடக்கழிவுகளை சலிக்கப்பட்டு இயற்கை உரம் தயார் செய்யப்படுகிறது.

இது விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.அனைத்துவிதத்திலும் குப்பைகளை பயன் உள்ளதாக மாற்றி வளமான வளம் மீட்பு பூங்கா வல்லத்தில் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் மற்றும் செயல் அலுவலர் பிரகந்தநாயகி ஆகியோர் கூறுகையில், இந்த வளம் மீட்பு பூங்காவின் செயல்பாட்டை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு பாராட்டியுள்ளார். பேரூராட்சியின் அனைத்து ஊழியர்களின் கடினமான உழைப்பால் வல்லம் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மையில் முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது. இந்த பணிகள் மேலும் சிறப்பாக செயல்படுத்த முனைப்புடன் பணியாற்றி வருகிறோம் என்றனர்.

Related Stories: